ராமேசுவரத்தில் இருந்து, அரசு செலவில் காசிக்கு ஆன்மீக சுற்றுலா : விண்ணப்ப விவரம்..

kasi2

உத்தரபிரதேச மாநிலம் காசியில் காசி தமிழ்ச்சங்கம் என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை இன்று  (19-ந்தேதி) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

ஒரு மாதம் நடைபெறும் இந்த கலாசார விழாவில் தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள தொடர்பு, தமிழின் பெருமைகளை விளக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 12 குழுக்கள் கலந்துகொள்கின்றன. 

இதற்காக ராமேஸ்வரம், கோவை, சென்னையில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கலந்துகொள்ள 2,500 பேர் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு, தங்கும் இடம், போக்குவரத்து அனைத்தும் இலவசம். 

இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசிக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு இந்த ஆண்டில் 200 நபர்கள் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்' என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இந்த ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 

இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மீகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

Share this story