சூரசம்ஹாரம் நிகழ்வு உணர்த்தும் தத்துவம்..

By 
soorasamharam

சூரபத்மன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் சில வரங்களை பெற்றான். 

அதன்படி, இந்த உலகில் தன்னை எவரும் வெல்லக்கூடாது, ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த பிள்ளையால் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என்ற வரங்களை பெற்றிருந்தான். 

வரங்களை பெற்ற சூரபத்மன் ஆணவம் கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனை பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். 

தேவர்களின் வேண்டுதலை கேட்ட ஈசன், சூரபத்மனை வதம் செய்ய தனது ஐந்து முகம் மற்றும் அதோ முகம் என்ற ஆறுமுகத்துடன் தோன்றி தனது நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகளால் 6 குழந்தைகளை உருவாக்கினார். 

பார்வதி தேவி அந்த குழந்தைகளை கண்டு மகிழ்ந்து தனது திருக்கரங்களால் ஒரு சேர தழுவி ஒரு குழந்தை ஆக்கினார். 

அந்த குழந்தை அழகாக இருந்ததால் அழகன் முருகன் என்றும், ஆறுமுகத்துடன் இருந்ததால் ஆறுமுகம் என்றும், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார். 

மேலும் தெய்வீகம், இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு என்ற 6 தன்மைகளுடன் திகழ்கிறார். 

சூரசம்ஹாரம் ஆணவம் மிகுந்த சூரனை முருகபெருமான் 6 நாள் போருக்குப்பின் சம்ஹாரம் செய்தார். 

சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

சூரபத்மனுடன் முருகன் 6 நாட்கள் போர் புரிந்தபோது, அவரது பக்தர்கள் திருச்செந்தூரில் விரதம் இருந்து தியானித்தனர். 

அதன்படி, தற்போதும் கந்தசஷ்டியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். 

சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகபெருமானின் வேல் பாய்ந்ததும், அவனிடம் இருந்த அஞ்ஞானம் மறைந்து மெய்ஞானம் வரப்பெற்றான். 

உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகபெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார். 

பகைவனை கொல்வது சஷ்டி விரதம் அல்ல. பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு. 

யானைமுக சூரனை வெல்வது மாயையை ஒழிப்பதாகவும், சிங்கமுக சூரனை வெல்வது கன்மத்தை ஒழிப்பதாகவும், சூரபத்மனை வெல்வது ஆணவத்தை அழிப்பதாகவும் கருதப்படுகிறது. 

உண்ணா நோன்பு இருந்தால் ஆணவம் அடங்கும். ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் இந்த உயரிய தத்துவத்தை விளக்குவதே கந்த சஷ்டி ஆகும்.

Share this story