திகட்டாத பேரழகு, திருவாரூர் தேர் வருது.!

By 
thiru

திருவாரூர் தியாகராஜர் கோவில், ஆழித்தேர் தமிழகத்தின் சைவ கோவில்களில் மிகவும் பழமையான தேர் என்ற பெயரைப் பெற்றது.

திருவாரூர் தியாகராஜர் கோவில், ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை பெற்றது. 

ஆழி என்றால் கடல் என்பது பொருள். கடல் போன்ற பெரிய தேர் என்பதை குறிக்கும் வகையில் இந்த தேருக்கு ஆழித்தேர் என்ற பெயர் வந்தது. 

இதனால், திருவாரூர் தேரழகு என்ற பெயரும் பெற்றது. அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடியாகும். இதன் எடை 220 டன்.

350 டன் எடை :

திருச்சி பெல் நிறுவனம் சார்பில், ஆழித்தேருக்கு இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்களுடன் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

மரத்தேரின் எடை 220 டன் என்றாலும் இதன் மீது பனஞ்சப்பைகள், மூங்கில், சவுக்கு , கயிறு, துணிகள், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு மொத்த எடை 350 டன்னாகும்.

ஐதீகம் :

தேரை இழுக்க 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆழித்தேர் திருவிழாவை, மாசி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி.

அதன்படி, இந்த ஆண்டு ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேராட்டம் நடத்தப்படுகிறது. ஆழித்தேரோட்டம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவது குறித்து, சமய இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.

ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.

Share this story