இன்று, தை அமாவாசை; முன்னோர் வழிபாடு : வம்சம் விருத்தியாகும்..

By 
thai1

மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்யவேண்டும். 

இந்தநாளில், தர்ப்பணம் முதலான சடங்குகள் செய்து, நம் முன்னோரை ஆராதித்து வணங்க வேண்டும். எள்ளும் தண்ணீரும் முன்னோருக்கு விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்யவேண்டும். தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம் பித்ருக்கள். 

எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். இந்த ஆண்டு தை அமாவாசை 21-ம் தேதி இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். 

இந்த நாளில், முன்னோரை ஆராதித்து, பூஜைகள் செய்து, நம் வேண்டுதலை அவர்களிடம் வைத்து முறையிடுவோம். அவர்களை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். இதனால் மகிழ்ந்த முன்னோர்கள் கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். 

நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். 

தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல ஏழைகளுக்கு தானம் அளிப்பதும் சிறப்பானது. 

முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலம், தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்; நல வாழ்வு கிடைக்கும்; வம்சம் விருத்தியாகும். 

Share this story