இன்றைய ஞாயிறும், தைத்திருநாளும்..

By 
pongal2

மாதங்களை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். தை முதல் ஆனி வரையான 6 மாதங்களை உத்ராயணம் எனவும் ஆடி முதல் மார்கழி வரையான 6 மாதங்களை தஷ்ணாயண காலமாகவும், பிரிக்கப்பட்டுள்ளது. 

சூரியன் மகர ராசியில் நுழையும் மகர சங்கராந்தியன்று, உத்ராயணம் துவங்கும் தை மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். 

கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் கால புருஷ 10-ம்மிடமான மகர ராசியில் சனியின் வீட்டில் தனது சுய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கும் தைமாத முதல் நாளில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் ஆரம்பமாகும். அன்று உலக உயிர்களுக்கு உணவு வழங்கும் உழவுத் தொழிலுக்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபட வேண்டும். 

இந்த வருடம் சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்று கிழமை 15.1.2023 அன்று தை மாதப் பிறப்பு நிகழ்வது மிகச் சிறப்பு. ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்ய வேண்டும். 

புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொடி கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும். பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய்,முந்திரி, திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில் வைத்துப் அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைத்து முழுக்கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்புபூசணி பத்தை, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய் ஆகியவற்றுடன்சூரியன், குல, இஷ்ட தெய்வத்திற்கு படைத்து வணங்க வேண்டும். 

பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்த பிறகு, அனைவரும் பொங்கல் சாப்பிட வேண்டும். சூரிய பகவானை தைத்திருநாள் அன்று சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட, இயற்கை சக்தியான சூரியனிடமிருந்து அதிகாலையில் வரும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. 

இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து உற்சாகமடைந்து உடல் வலிமையும் பெறுகின்றன. ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். கண்களில் உள்ள குறைபாடுகள் சீராகும், அறிவு வளரும்.
 

Share this story