நாளை, ஆடி அமாவாசை : தர்ப்பணம்; புனித நீராடலுக்கு முன்னேற்பாடு
 

By 
pitru tharpanam

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். 

அவர்கள், காலையில் சூரியோதயத்தை பார்த்துவிட்டு, பகவதி அம்மன் கோவில் சன்னதியில் சாமி தரிசனம் செய்கின்றனர். 

பின்னர், படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று வருவது வழக்கம். 

முக்கடல் சங்கமம் :

இது தவிர, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் நீராடி, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 

இந்த ஆண்டு, வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசை ஆகும். 

அன்று, குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து, முக்கடல் சங்கமத்தில் அதிகாலை 4 மணி முதல் நீராடி, இறந்த முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பார்கள். 

அதன் பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 

ஆடி அமாவாசையை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவதற்கு வசதியாக படித்துறையின் பக்கவாட்டில் இரும்புக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், கடலுக்குள் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, இரும்புச்சங்கிலி கோவில் நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது. 

தர்ப்பண நிகழ்ச்சி :

மேலும், படித்துறை முழுவதும் பாசி படர்ந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. 

எனவே, படிக்கட்டை சுத்தம் செய்து போதிய மின் விளக்கு வசதியும் செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

குழித்துறை நகராட்சி சார்பில், தாமிரபரணி ஆற்றின் கரையில் 97-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி, ஆடி அமாவாசை நாளான வருகிற 28-ந் தேதி குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

அன்று அதிகாலை முதல் ஏராளமானோர் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். 

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, குழித்துறை மகாதேவர் கோவில் அருகில் ஆற்றின் கரையையொட்டி பெரிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. 

மேலும், தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள் மற்றும் சுற்றுப்பகுதிகளை நகராட்சி சார்பில் சீர்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
*

Share this story