பெரிய விஷயம் எது? சிறிய விஷயம் எது? : வாழ்வியல் சிறுகதை..
 

By 
guru teaching

'மனித வாழ்க்கையில், முதலில் பெரிய விஷயங்களுக்கு இடம் கொடுங்கள். அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்' எனபதை உணர்த்தும் ஆன்மிக சிறுகதை இங்கே பார்ப்போம்.

'செல்வந்தர் ஒருவர், முனிவரை சந்திப்பதற்காகச் சென்றார். தியானத்தில் இருந்த முனிவரை, சில மணி நேரம் காத்திருந்து, அவர் கண் திறந்ததும் அவருக்கு முன்பாகப் போய் நின்றார். 

செல்வந்தரைப் பார்த்த முனிவர், “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

அதற்கு செல்வந்தர், ‘சுவாமி.. என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. அதை வைத்து நிறைய கேளிக்கைகளில் ஈடுபட்டு, சந்தோஷம் அடைந்தேன். 

ஆனால், எனக்கு மன அமைதியும், குடும்பத்தினரின் அன்பும், பாசமும் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார்.

மரத்தின் அடியில் தவம் செய்து கொண்டிருந்த அந்த முனிவர், எதுவும் பேசாமல் எழுந்து அருகில் இருந்த தன்னுடைய குடிலுக்குள் நுழைந்தார். செல்வந்தருக்கோ, ‘முனிவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாரே’ என்ற வருத்தம் மேலோங்கியது. 

ஆனால், சிறிது நேரத்திலேயே குடிலுக்குள் இருந்து வெளிப்பட்ட முனிவர், செல்வந்தரிடம் வந்தார்.

தன்னிடம் இருந்த பை ஒன்றை செல்வந்தரிடம் கொடுத்த முனிவர், “இந்த பையில் இங்கு இருக்கும் பெரிய பெரிய கற்களை எல்லாம் நிரப்பு” என்றார்.

முனிவர் சொன்னபடியே அந்த பைக்குள் பெரிய பெரிய கற்களை எல்லாம் வைத்து நிரம்பினார், செல்வந்தர். 

இனிமேல், ஒரு பெரிய கல் கூட அதன் உள்ளே நுழையாது என்ற நிலை வந்ததும் முனிவரிடம் வந்து பையைக் காட்டினார்.

அந்தப் பையைப் பெற்றுக்கொண்ட முனிவர், கீழே கிடந்த சிறிய கூழாங்கற்கள் சிலவற்றை எடுத்தார். அதை பையில் போட்டு, ஒரு குலுக்கு குலுக்கினார். 

கூழாற்கற்கள் அனைத்தும் பெரிய கற் களுக்கு ஊடே இருந்த இடைவெளியில் போய் இறங்கின. இதற்கு மேல் கூழாங்கற்களைக் கூட அந்தப் பைக்குள் போட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

பின்னர், தரையில் இருந்து மண்ணை அள்ளி அந்த பைக்குள் போட்டு, ஒரு குலுக்கு குலுக்கினார். 

பெரிய கற்களுக்கும், சிறிய கூழாங்கற்களுக்கும் ஊடே இருந்த இடைவெளியை அந்த மணல் நிரப்பியது. இப்போது அந்த பைக்கு மேற்கொண்டு எதையும் போட முடியாது என்று முனிவரும் ஒப்புக்கொண்டார்.

இப்போது முனிவர், செல்வந்தரை நோக்கி “இதே பையை முதலில் மணல் கொண்டு நிரப்பியிருந்தால், அதற்குள் பெரிய கற் களையும், கூழாங்கற்களையும் சேர்க்க இடம் இருந்திருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.

“கண்டிப்பாக இருந்திருக்காது” என்றார் செல்வந்தர்.

முனிவர் செல்வந்தருக்கான பதிலை இப்போது கூறினார். “வாழ்வும் அப்படிப்பட்டதுதான். வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் அனைத்தும் பெரிய கற்களைப் போன்றவை. 

வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள், கூழாங்கற்களைப் போன்றவை. 

கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் மணல் போன்றவை.

உங்களுடைய வாழ்க்கையில் முதலில் பெரிய விஷயங்களுக்கு இடம் கொடுங்கள். அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். 

அதுவே, உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.” என்றார்.

இப்போது மனம் தெளிவடைந்து வீட்டிற்குப் புறப்பட்டார், செல்வந்தர்.
*

Share this story