பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பது ஏன் ? : புராண விளக்கம்
 

By 
sadari1

திருமால் கோவிலில் வழிபாடு முடிந்ததும் தீர்த்தம் பெற்று, துளசி பெற்று சடாரி ஆசியோடு திரும்ப வேண்டும். 

பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது. 

வழிபாடு பூர்த்தி :

திருமால் ஆலயங்களுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சந்நதிகளிலும் தீர்த்தம், திருத்துழாய் என்கிற துளசி அல்லது மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான், அந்தந்த சந்நதிகளில் வழிபாடு பூர்த்தியானதாகக் கருதுவார்கள். 

பாதுகையாகிய சடாரியைச் சடகோபராகக் கொள்ளும் மரபும் உண்டு. 

சடகோபன் என்ற சடாரி மூலமேதான் திருமகள் கேழ்வனான பகவான் திருவடிகளில் நம் தலையைச் சமர்ப்பிப்பது சாத்யம் என்பர். 

பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது. பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி சம்பந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. 

இந்த வகையில், நமக்குப் பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார், மற்றது பாதுகை. ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருப்பதில் வியப்பில்லை. 

ஆழ்வாருடைய அமுதத் திருவாய் ஈரத்தமிழைப் பயின்று எம்பெருமானை அடிபணிவோர்க்குப் பரமனருள் சித்திக்கும். 

சடத்துக்கு அஞ்ஞானத்துக்கு பகை என்ற பொருளிலேயே சடாரி என ஆழ்வாரை வழங்குவர். தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபான் அருளினாலே என்பர். 

அதாவது இறைவனது பாதார விந்தம், நம்மிடமுள்ள காமம், கோபம் போன்ற தீய குணங்களுக்கு எதிராக நின்று நம்மை உய்விக்க வல்லது. 

நற்கதி நல்கும் :

பகவானுடைய திருப்பாதுகைகளுக்கு உரித்தான பெருமைகளெல்லாம் ஆழ்வார் ஆச்சாரியார்களுடைய திருப்பாதுகைகளுக்கும் உண்டு என்பதில் ஐயமேதுமில்லை. 

எனவே, கோயில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.
*

Share this story