திருவாரூர் தேரோட்டம் போல வருமா? : ஆடித்திருவிழா கோலாகல நிகழ்வுகள்..

By 
thiruvarur

திருவாரூர் தியாகராஜர் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பெரிய கோவில், திருமூலட்டானம், பூங்கோவில் என இக்கோவிலை அழைக்கிறார்கள். 

சிறப்பம்சம் :

இங்கு, மூலவராக வன்மீகநாதர் எனும் புற்றிடங்கொண்டாரும், உற்சவராக தியாகராஜரும் அருள்பாலித்து வருகிறார்கள். 

நீலோத்பலாம்பாள், கமலாம்பிகை ஆகிய அம்மன் சன்னதிகளும் உள்ளன. 

சப்த விடங்க தலங்களில் முதன்மையான தலமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமிக்கான தலமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் திகழ்கிறது. 

பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா சமயங்களில், தியாகராஜரின் பாத தரிசன நிகழ்ச்சி இக்கோவிலின் சிறப்பம்சமாகும். 

ஆழித்தேர், கமலாலய குளம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கமலாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம். 

அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவையொட்டி கேடக உற்சவம், பூத வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. அதன் தொடர்ச்சியாக
அம்பாள் தேரோட்ட விழா நடந்தது. 

தரிசனம் :

விழாவையொட்டி,  கோவிலில் இருந்து மனோன்மணி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார். 

ஆரூரா, கமலாம்பாள் என பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தேர் கீழவீதியில் இருந்து புறப்பட்டு தெற்குவீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக தேர் நிலையை அடைந்தது. 

இதனைத் தொடர்ந்து தேரில் இருந்து அம்பாள் புறப்பட்டு கோவிலை அடைந்தார். 

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
*

Share this story