அனைத்து வழிபாட்டுத் தலங்களும், இன்று முதல் திறப்பு : மகிழ்ச்சி

By 
 All places of worship, opening today Joy

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல், மூடப்பட்டு இருந்தது. பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், கோவில்களில் அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாமல் இருந்ததால், பக்தர்கள் கவலையில் இருந்தனர்.

மகிழ்ச்சி :

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி, நடைபெற்று முடிந்தன.

பக்தர்கள் கவனிக்கவும் :

இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை வட்டார தகவல்கள் வருமாறு :

கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், 273 கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்ய 5 -ந் தேதி (இன்று) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். 

கோவில் நுழைவு வாயிலில் உள்ள கிருமி நாசினியால், பக்தர்கள் கைகளை சுத்தம் செய்து விட்டு, உள்ளே வர வேண்டும்.

பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் சரி பார்க்கப்படும். இதில், உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களைக் கொண்டு வர அனுமதி கிடையாது. சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

அபிஷேகத்தின்போது, பக்தர்கள் கோவிலுக்குள் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

விபூதி, குங்குமம் ஆகியவை பிரசாத தட்டில் வைக்கப்பட்டு இருக்கும். அதை பக்தர்கள் எடுத்துக்கொள்ளலாம். 

கொரோனா தடுப்பு விதிகளை பக்தர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்' என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களிலும் வழிபாடு நடத்துவதற்கு, உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Share this story