திருப்பதி கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் : இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது..

By 
vasan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடக்கிறது. 

3 நாட்களும் தினமும் காலை 7 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள். 

2-வது நாளான 4-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை நான்கு மாடவீதிகளில் உலா வந்து, வசந்த மண்டபத்துக்கு செல்கிறார்கள். அங்கு வசந்தோற்சவ அபிஷேகம் முடிந்ததும் கோவிலுக்குள் திரும்புவார்கள். 

3-வது நாளான 5-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா-ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, கிருஷ்ணர் வசந்தோற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை கோவிலுக்கு திரும்புவார்கள். வசந்தோற்சவத்தை முன்னிட்டு தினமும் மாலை 6 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. 

வசந்தோற்சவம் நடக்கும் மண்டபம் காணிக்கையாளர்களின் உதவியோடு பல்வேறு பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருந்து பிரத்யேக பழங்கள், உலர் பழங்கள், மலர்கள் தருவிக்கப்பட உள்ளன. 

வசந்தோற்சவத்தையொட்டி கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை இன்று  முதல் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Share this story