திருச்செந்தூரில் தமிழில் அர்ச்சனை தொடக்கம் : கடற்கரைக் குளியலுக்கு அனுமதி

By 
 Archana begins in Tamil in Thiruchendur Permission for beach bathing

தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, 47 பெரிய கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது.

'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தரிசனம் :

இந்நிலையில், முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண்களும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள், தமிழில் அர்ச்சனை செய்து தரிசனம் பெறலாம்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனத்திற்குத் தடை செய்யப்பட்டதால், திங்கள் முதல் ஏராளமான பக்தர்கள் கோவில் தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழில் அர்ச்சனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், முதல் நாளில், பலர் தமிழில் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.

அனுமதி :

இதற்கிடையே, கடற்கரை, சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமானவர்கள் குவிந்தனர். மேலும், நாழிக் கிணற்றிலும் பக்தர்கள் புனித நீராடினர். 

அதிகமானவர்கள் திரண்டதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக,  நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடற்கரையில் வழக்கம்போல குளிக்க அனுமதி தொடர்கிறது.
*

Share this story