ஸ்ரீமுருகப்பெருமானின் ஆறுபடைவீட்டுச் சிறப்புகள்..

arumugan

சூரபத்மன் என்னும் அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் நூற்றியெட்டு யுகங்கள் வாழும் ஆயுளும், ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத மாபெரும் வரங்களைப் பெற்றான். 

தான் பெற்ற வரங்களினால் அகங்காரம் கொண்டு, தேவர்களையும் - முனிவர்களையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்தான் சூரபத்மன். நான்முகன், திருமால், இந்திரன், தேவர்கள் யாவரும் கயிலைவாழ் சிவபெருமானிடம் வந்து, சூரபத்மன் தேவர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைகள் புரிகின்றான் என்று முறையிட்டனர். 

சூரபத்மனின் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினர். "தேவர்களே நீங்கள் இனி வருந்த வேண்டாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யாம் ஒரு புதல்வனை ஈந்தருள்வோம். அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான். அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்" என்று கூறியருளினார் ஈஸ்வரன். 

அதன்படியே சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் விட்டது, அவை ஆறு குழந்தைகளாக விசாக நட்சத்திரம் கொண்ட திருநாளில் அவதரித்தன. 

அக்கினிப் பொறியாய் இருந்து அவதரித்தமையால் "அக்கினி கர்ப்பன்" என்றும், கங்கையில் தவழ்ந்தமையால் "காங்கேயன்" என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியமையால் "சரவணன், சரவண பவன்" என்றும் திருப்பெயர்களுடன் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார். 

இந்த ஆறு குழந்தைகளையும் ஈசனின் கட்டளைப்படி கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால், கார்த்திகேயன் என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். திருக்கரத்தில் வேலை ஏந்தியதால் வேலாயுதன் என்றும், ஒளியுடைய வேலாக விளங்கியமையால் கதிர்வேலன் என்றும், தமிழ்த் தெய்வமாக விளங்குவதால் புலவன் என்றும், மயில் மீது ஊர்வதால் மயில் வாகனன் என்றும், சேவற்கொடியினை உடைய காரணத்தால் சேவற்கொடியோன் என்றும், கடம்பமலர் அணிவதால் கடம்பன் என்றும், அன்பர்களின் நெஞ்சத்தில் வாழ்வதால் குகன் என்றும், மாறாத இளமையோன் ஆதலால் குமரன் என்றும் பல்வேறு பெயர்களால் முருகப்பெருமான் போற்றப்படுகிறார். 

ஆறு உருவங்களும் ஓர் உருவாதல் : 

கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வரும்படி பார்வதியிடம் சிவபெருமான் அருளினார். பார்வதி தேவியும் அதன்படியே ஆறு குமாரர்களையும் ஒரே சமயத்தில் தன்னுடைய இரண்டு திருக்கரத்தினால் வாரி அணைத்து எடுத்தாள். 

ஆறு உருவங்களும் ஒரே உருவமாகி, ஓருடல், ஆறு தலைகள், பன்னிரு கரங்கள், இரு பாதங்களை உடைய அற்புத உருவமாக மாறியது. அழகே வடிவமெடுத்து "கந்தன்" என்னும் நாமத்துடன் ஆறுமுகன் விளங்கினான். 

ஆற்றுப்படையே ஆறுபடை வீடு : 

படைவீடு என்பது போர் புரியும் படைத்தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும். ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர். ஆயினும் ஏனையத் தலங்களும் படைவீடு என்றே அழைக்கப்படுகின்றன. 

நக்கீரர் "திருமுருகாற்றுப் படை" என்னும் தம்முடைய நூலில் ஆறுமுகப் பெருமான் தங்கியிருந்த தலங்களையும் ஆறுமுகப் பெருமானை வழிபடுவோர் எல்லா கஷ்டங்களையும் நீக்கப் பெற்று அருளைப் பெறுகின்றனர் என்றும் அவரது பெருமைகளை கூறி ஆற்றுப் படுத்துகிறார். 

அதனையட்டி ஆறுமுகனுக்கு ஆற்றுப் படைவீடு என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே ஆறுபடை வீடாயிற்று. கச்சியப்ப சிவாச்சாரியார், அகத்திய மாமுனிவர், ஒளவையார், வள்ளலார் போன்ற எண்ணற்ற புலவர்களும் முருகன் புகழை பாடிப் பேறு பெற்றுள்ளனர். 

ஆறுபடை வீடுகள் : 1. திருப்பரங்குன்றம் 2. திருச்செந்தூர் 3. பழனி 4. சுவாமி மலை 5. திருத்தணி 6. பழமுதிர்ச்சோலை என்பனவாகும். 

ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் : அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். 

நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும். 1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம் 2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம் 3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம் 4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம் 5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி 6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர். 

ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.

Share this story