சிதம்பரம் நடராஜர் கோவில் : 19-ந்தேதி சிகர விழா

By 
Chidambaram Natarajar Temple 19th Summit Festival

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்  நடைபெற்றது. 

கோவிலின் சித்ர சபை எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்நிறுத்தி, ஆவாஹனம் செய்து காலை 8.20 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.

நேற்று அதிகாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 கோபுர வாசல்களும் வழக்கம்போல், திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசனம் :

ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து, இன்று சந்திர பிரபை வாகன வீதிஉலா, 13-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா, 14-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, 15-ந் தேதி வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 

16-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 17-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா 18-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

சிகர நிகழ்ச்சி :

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 19-ந் தேதி கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. 

இதற்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

20-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமச சுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. 

பின்னர், காலை 10 மணிக்கு சித்ரசபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்ரசபா பிரவேசமும் நடைபெறுகிறது.

21-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

உற்சவத்தின் 10 நாட்களும், மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில், சித்ரசபை முன்பு மாணிக்க வாசகரை எழுந்தருளச் செய்து, திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.
*

Share this story