சிதம்பரம் நடராஜர் கோவில் : இன்று முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி விழா

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில், பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
4 ரதவீதிகளில் வலம் வந்த தேர், கீழரத வீதியில் நிலையை அடைந்தது. பின்னர், இரவு முழுவதும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை, ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.
ஆருத்ரா தரிசனம் :
காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா காட்சி நடந்தது. மாலை 3 மணியளவில், ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
இதையொட்டி, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து, நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார்கள்.
இதனையடுத்து, நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி :
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
இன்று (21-ந் தேதி) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.