கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

By 
Christmas Celebration Special Prayers in Churches

ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டன. 

இந்த வருடம், தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பதால், வழிபாடு நடத்துவதற்கு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதாலும் விமரிசையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே வீடுகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும், குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்தும் பண்டிகை கொண்டாட ஆயத்தமானார்கள்.

சிறப்பு பிரார்த்தனை :

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. 

நேற்று இரவு 11.30 மணி முதல், அதிகாலை வரை கிறிஸ்துமஸ் வழிபாடுகள் ஆலயங்களில் நடைபெற்றன. 

கத்தோலிக்க திருச்சபைகளில், நள்ளிரவில் தொடங்கிய வழிபாடு அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.

தென் இந்திய திருச்சபை ஆலயங்கள், மெத்தடிஸ்ட், ஆர்க்காடு லூத்ரன், பெந்தேகோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளில், அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி, காலை 6, 7 மணி வரை நடைபெற்றது.

சாந்தோம் தேவாலயம் :

சென்னையில், சாந்தோம் தேவாலயம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆலயத்தின் வெளிப்புறமும், உள்புறமும் வித விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

இதேபோல பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பாரிமுனை அந்தோணியார் ஆலயம், பரங்கிமலை மாதா ஆலயம், பெரம்பூர் லூர்துமாதா ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில், நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல சி.எஸ்.ஐ. கதீட்ரல் பேராலயம், சூளை தூய பவுல் ஆலயம், சிந்தாதரிப்பேட்டை சியோன் ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி, டவுட்டன் ஹார்வுட்ரா, தூய ஆன்ட்ரூஸ், தக்கர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் அதிகாலை நடந்தது.

சமாதானம் :

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கொட்டும் பனி மற்றும் குளிரிலும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில், பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக பங்கேற்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் வழிபாடு முடிந்ததும், ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவிக்கும் வகையில், வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள்.
*

Share this story