தைப்பொங்கல் வரலாறு

By 
History of Thaipongal

தைப்பொங்கல், தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. 

தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா,மொரிசியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 

இவ்விழா சமயங்கள் கடந்து, அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

விவசாயம் :

சங்ககாலத்தில், அறுவடைக் காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். 

தை முதல் நாளில், நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். 

இதுவே நாளடைவில், மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது. 

பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில், எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தப்பட்டதாகவே இருந்துள்ளது.

இந்திர விழா என்ற பெயரில், இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. 

இந்திர விழா :

மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா, காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இப்போது, பொங்கல், தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.

ஆனால், அந்த காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.

முதன்முதலாக, இந்திர விழா நடத்தியபோது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். 

நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல், சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. 

இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவழிபாடு செய்யப்பட்டது. 

மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை

 புதுநெல் சமையல் :

பிற்காலத்தில், சூரியன் பற்றிய அறிவு  வந்தவுடன் சூரியன் சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த சூரியக் கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். 

பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்குப் பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில், இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. 

தாங்கள் அறுவடை செய்த புதுநெல் கொண்டு, தை முதல்நாளில் சமைத்து வழிபாடு செய்த 'இந்திர விழா' என்ற பெயர், காலச்சுழற்சியில் பொங்கல் என மாறி, இன்றும் தமிழர்கள் உள்ளமெல்லாம் தித்திக்கிறது.
*

Share this story