கழுகுமலை கோவில் : 5-ந்தேதி தேரோட்டம்; நிகழ்ச்சிகள் விவரம்..

By 
kalu

கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு நடை திறக்கப்பட்டது. திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து அங்குள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை மோகன்பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.

விழாவில். முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

காலை 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று பின்னர் நிலையை வந்தடைகிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் தினமும் மண்டகப்படி திருவிழா நடக்கிறது.

Share this story