ஒரு மூதாட்டிக்கு கண்ணன் பணிகின்றான்.!

By 
Kannan works for an old lady!

பதை பதைக்கும் மனதுடன் ஆலயத்தின் கருவறையை திறந்தார், அர்ச்சகர். ‘எந்த அசம்பாவிதமும் நேர்ந்திருக்கக்கூடாது’ என்ற வேண்டுதலை முன்வைத்துக் கொண்டிருந்தது அவரது மனம். 

ஆனால், கடந்த சில நாட்களாகவே அர்ச்சகரை வாட்டி வதைத்து வரும் காட்சி அன்றும் காணப்பட்டது. 

கருவறைக்குள் இருந்த கிருஷ்ணர் விக்கிரகத்தின் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம் ஒட்டியிருந்தது.

‘ஒரே ஒரு சாவிதான் இருக்கிறது. அதையும் தன்னுடைய தலைக்கு அடியில் வைத்துத் தூங்குகிறேன். பூட்டிய அறை பூட்டியபடியே இருக்க, தினமும் ஆலயத்தைத் திறந்து இந்த அசம்பாவிதச் செயலைச் செய்பவர்கள் யாரோ?’ என்று மனம் வருந்தினார், அர்ச்சகர். 

பக்தியின்றி வேறில்லை :

அர்ச்சகர் தினமும் சந்தனக்காப்பு சாத்தி, இறைவனுக்கு இராப்பூஜை முடித்து ஆலயத்தை பூட்டிவிட்டுச் செல்வதும், மறுநாள் கோவிலை திறக்கும்போது, இறைவனின் விக்கிரகத்தில் சாணம் இருப்பதும் வாடிக்கையாகவே போய்விட்டது.

யாரிடம் இதுபற்றிச் சொல்வது?, யார் நம்புவார்கள்? அனைவரும் தன்னைத்தானே சந்தேகம் கொள்வார்கள்? போன்ற கேள்விகள் மனதை துளைத்துக் கொண்டிருக்க, சாணத்தை துடைத்து விக்கிரகத்தை சுத்தப்படுத்தினார், அர்ச்சகர். சிறிது நேரத்தில், தினமும் ஆலயத்திற்கு வரும் மூதாட்டி அன்றும் வந்திருந்தாள்.

தளர்ந்த தேகம் கொண்ட மூதாட்டி, கண்ணில் பரவசம் பொங்க கருவறை முன்பாக அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் அவளது உற்சாகம் அர்ச்சகரையும் தொற்றிக்கொண்டது. 'என்ன பாட்டி.. என்ன வேண்டிக்கொண்டீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு மூதாட்டி, “நேற்று நான் கண்ணனுக்கு வெண்ணெய் படைத்தேன். அதை அதிகமாக தின்று விட்டான். அது ஜீரணமாக வேண்டும் என்று வேண்டினேன்” என்றாள்.

'அதில்லை பாட்டி.. உனக்காக என்ன வேண்டிக்கொண்டாய்?' என்று கேட்டார், அர்ச்சகர்.

'போகப்போற காலத்தில் எனக்கென்ன தேவை இருக்கிறது. என் பிள்ளை கண்ணன் சவுக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் பிரார்த்திக்கொண்டிருக்கிறேன். 

தினமும் தன்னை வழிபடுபவர்களை, வலது கரம் உயர்த்தி ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு கை வலிக்காதா? கொஞ்சம் நிறுத்தி ஓய்வெடுக்கச் சொன்னால் கேட்பதில்லை. நம் பேச்சை அவன் கேட்பானா? அவன் பேசிய கீதை பேச்சை கேட்டுதான் உலகம் இயங்குகிறது. 

இதில் எனக்காகவும் அவனிடம் வேண்டி, அதற்காக அவன் ஆசிர்வதிக்க வலது கரத்தை உயர்த்தி, மேலும் வலியை உண்டாக்குவதில் எனக்கு விருப்பமில்லை' என்றாள் மூதாட்டி.

அவளது பேச்சு வேடிக்கையாக இருந்தாலும், கண்ணனின் மீது அவள் கொண்ட பக்தி, அதில் வெளிப்பட்டது. அதை அர்ச்சகர் ரசித்தார்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் :

அன்று இரவு பூஜை முடிந்து, வீட்டிற்கு வந்து உணவருந்தி விட்டு படுத்த அர்ச்சகருக்கு உறக்கமே வரவில்லை. `நாளைய பொழுதிலும் கண்ணன் விக்கிரகத்தில் பசுஞ்சாணம் இருக்குமே?’ என்பதை நினைத்து அவரது மனம் புழுங்கித் தவித்தது.

அப்போது, அவர் முன்பாக தோன்றிய கண்ணபிரானைக் கண்டு ஆனந்தத்தில் வாயடைத்துப் போனார், அர்ச்சகர்.

‘அர்ச்சகரே.. நீங்கள் என் உடலில் பட்டிருக்கும் பசுஞ்சாணத்தை எண்ணி வருந்தத் தேவையில்லை. அது என் பக்தையின் அதீத பக்தியால் எனக்கு கிடைக்கும் பரிசு. அதை நான் விருப்பத்துடன் தான் ஏற்றுக்கொள்கிறேன். 

உங்களுக்கு அந்த காட்சியைப் பார்த்தால்தான் விளங்கும்' என்றவர், அங்கு ஒரு காட்சியை ஒளிரச் செய்தார்.

அதில் தெரிந்தது, தினமும் ஆலயத்திற்கு வரும் மூதாட்டியின் வீடு. அர்ச்சகர் மூதாட்டியின் செய்கையை கவனித்தார். 

வீட்டு வேலைகளைச் செய்த படியே, கண்ணனோடு பேசிக்கொண்டிருந்தாள், அந்த மூதாட்டி. ‘கண்ணா.. இன்று குளிர் அதிகமாக இருக்கிறது. போர்வை போர்த்திக் கொண்டு உறங்கு’ என்று கூறியபடியே வீட்டை பசுஞ்சாணத்தால் மெழுகினாள். 

பின்னர், கையில் ஒட்டியிருந்த சிறிதளவு சாணத்தை சாளரத்தின் வழியாக ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று சொல்லியபடி வெளியே வீசினாள். 

அந்த சாணம்தான் தினமும் கண்ணனின் விக்கிரகத்தில் படிகிறது என்பதை அர்ச்சகர் உணர்ந்துகொண்டார்.

வைகுண்ட அழைப்பு :

மறுநாள் கோவிலைத் திறந்த அர்ச்சகர், கண்ணன் விக்கிரகத்தில் ஒட்டியிருந்த பசுஞ்சாணத்தை ஒரு இலையில் மடித்து, தன் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டார். மூதாட்டிக்காக காத்திருந்தார். ஆனால், அவள் வரவில்லை. 

அன்று இரவு அர்ச்சகர் கனவில் வந்த கண்ணன், 'அர்ச்சகரே.. நீங்கள் எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம். ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். இனி அது கிடைக்காது. 

ஏனெனில், நாளை என் பக்தை என்னை வந்து சேரப்போகிறாள். அவள் உடல் நலமில்லாத காரணத்தால்தான் இன்று ஆலயம் வரவில்லை' என்றார்.

மறுநாள் மூதாட்டியின் இல்லத்திற்கு அர்ச்சகர் சென்றபோது, அவளது உயிர் பிரிந்திருந்தது. அங்கு தேவதூதர்களுக்குப் பதிலாக, கண்ணனே தேரில் வந்து, தன் பக்தையை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்ற காட்சி அர்ச்சகரின் கண்களுக்கு மட்டுமே புலப்பட்டது. 

மூதாட்டியின் பக்தியையும், அதற்கு இறைவன் செய்த பிரதிபலனையும் நினைத்து மனமுருகி நின்றார் அர்ச்சகர்.

Share this story