மதுரை மீனாட்சி அம்மன் கோவில் :  தெப்பத்திருவிழா தொடங்கியது

By 
Madurai Meenakshi Amman Temple The boat festival has started

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அதையொட்டி, சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரம் பகுதியில், திருவிழாவிற்கான யாகசாலை பூஜை நடந்தது.

அப்போது அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

பின்னர், கும்ப லக்னத்தில் திருவிழாவிற்கான கொடியை ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கும், சுவாமி-அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

கோபுர தரிசனம் :

இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு உத்தரவிட்டிருந்தது. 

எனவே, பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசித்துச் சென்றனர். வெளியூர் பக்தர்களும் கோபுரத்தை தரிசனம் செய்து சென்றனர்.

விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவிலுக்குள் உள்ள ஆடி வீதியில் வலம் வருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிரறுப்பு திருவிழா :

விழாவில் வருகிற 12-ந் தேதி, சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 14-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது. 

தெப்பத் திருவிழாவிற்கு முன்னோட்டமாக, தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 17-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது.

18-ந்தேதி :

விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா, காமராஜர் சாலையில் உள்ள தெப்பக் குளத்தில் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

அன்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 10.40 மணி முதல் 11.04 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 

காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி-அம்மன் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

Share this story