மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண தரிசனம்: ஏப்.9 முதல் கட்டணச் சீட்டு முன்பதிவு..

By 
mmm9

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்.11 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் திருக் கல்யாணம் ஏப்.21-ம் தேதி கோயில் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது.

திருக் கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, ரூ.200, ரூ.500-க்கான கட்டணச் சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற அடிப்படையில், பக்தர்கள் கொள்ளளவுக் கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும், திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். 

இதற்காக இந்து சமய அறநிலையத் துறை இணைய தளமான https://hrce.tn.gov.in மற்றும் கோயில் இணைய தளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகியவை மூலம் ஏப்.9 முதல் 13-ம் தேதி இரவு 9 மணி முடிய ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டு முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.500 சீட்டுக்கு ஒருவர் 2 முறை பதியலாம். ரூ.200 சீட்டுக்கு ஒருவர் 3 முறை பதியலாம். ஒரே நபர் இரண்டையும் பதிய முடியாது. பக்தர்கள் வசதிக்காக கோயிலுக்குச் சொந்தமான மேற்கு சித்திரை வீதியிலுள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோயில் பணியாளர்கள் மூலம் கட்டணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பதிவு செய்தவர்களுக்கு மின்னஞ்சல், மொபைல் போன் எண்ணுக்கு ஏப்.14-ல் தகவல் அனுப்பப்படும். குறுந் தகவல் கிடைக்கப் பெற்றவர்கள், ஏப்.15 முதல் 20-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி முடிய விஷ்ரம் தங்கும் விடுதியில் விற்பனை மையத்தில் கட்டணச் சீட்டு பெறலாம்.

கட்டணச் சீட்டு பெற்றவர்கள் திருக்கல்யாணத்தன்று ( ஏப்.21 ) காலை 5 முதல் 7 மணிக்குள் கோயிலுக்குள் இருக்க வேண்டும். ரூ.500 கட்டணச் சீட்டுதாரர்கள் கோயில் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சந்நிதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவர். 

ரூ.200 கட்டணச் சீட்டுதாரர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story