பெட்டியை திறந்து பார்.!
 

By 
Open the box and see!

மரணப் படுக்கையில் இருந்த குருவின் அருகில் அமர்ந்து, தன்னுடைய நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான், சீடன். அவனது கவலை படர்ந்த முகத்தைப் பார்த்ததும், 'ஏன் இப்படி கவலையாக இருக்கிறாய்?' என்று கேட்டார்.

அதற்கு அந்த சீடன், 'குருவே.. இதுநாள் வரை நீங்கள் கூறியபடியே என்னுடைய வாழ்க்கையை அமைத்து வந்தேன். ஜெபம், தியானம் என்று தொடர்ந்து வந்தேன். இருந்தாலும் நான் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடையும் காலம் எது என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த நிலையை அடையும் முன்பாகவே என்னை விட்டு நீங்களும் செல்லப்போகிறீர்களே. இனி, நான் எனது ஆன்மீக பயிற்சியை எப்படி தொடர்வது?, உங்கள் காலத்திற்குப் பிறகு, என்னுடைய சந்தேகங்களை யாரிடம் கேட்பது?. அந்த வருத்தம்தான் என்னை அதிக துயரத்தில் ஆழ்த்துகிறது' என்றான். 

அவனிடம் குரு, 'கவலைப்படாதே. என்னுடைய படுக்கையின் அருகில் இருக்கும் பெட்டியை எடுத்துக்கொள். அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன். அது, அனைத்து விஷயங்களையும் உனக்குப் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும்போது மட்டும், அந்தப் பெட்டியைத் திறந்து பார். உனக்கு என்னுடைய ஆசி எப்போதும் இருக்கும்' என்று வாழ்த்திவிட்டு இறந்து போனார்.

குரு உபதேசம் :

நாட்கள் சென்றன.
சீடனுக்கு தன்னுடைய ஆன்மீக சாதனையில், பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை. தியானம், ஜெபத்தை விட்டு விட்டு போய்விடலாமா? என்று கூட நினைத்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கு, மரணப் படுக்கையில் குரு சொன்னது நினைவுக்கு வந்தது. 

உடனடியாக, குரு தனக்கு அளித்த பெட்டியைத் திறந்து பார்த்தான். அதன்பிறகான நாளில் அவனுக்கு ஆன்மீகம் கைவரப் பெற்றது. அவன் ஆன்மீகத்தின் உயர்ந்த நிலையை எட்டினான். இன்னும் சில நாட்கள் சென்றன. 

அவன் தன்னுடைய கருத்துகளை மக்களிடம் பரப்பினான். அதை ஏற்றுக்கொள்ள மறுத்து மக்கள் பலரும் கலவரம் செய்தனர். மக்களுக்கு தன்னுடைய கருத்துகளை எடுத்துரைக்க வழி தெரியாமல் திணறினான். அந்த நேரத்திலும், அவன் தன்னுடைய குரு கொடுத்த பெட்டியை மீண்டும் திறந்து பார்த்தான். அதன்பின் சில காலத்திலேயே மக்கள், அந்த சீடனுடைய கருத்துகளை ஏற்றுக்கொண்டனர். 

இப்படியே, தனக்கு சிக்கல்கள் உருவாகும் வேளையில் எல்லாம் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்து, குருவின் உபதேசத்தின் படி, நடந்து வெற்றி பெற்றான். 

சீடனின் சீடன் :

இப்போது, அந்த சீடனின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது. அந்த சீடனுக்கும் ஒரு சீடன் இருந்தான். அவனிடம் அந்தப் பெட்டியை அளித்து, 'என் பிரியத்திற்குரிய சீடனே.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும், இந்த பெட்டியைத் திறந்து பார். எனது உபதேசம் உனக்கு கிடைக்கும்' என்று கூறி விட்டு, அவனும் மரணித்துப் போனான். 

அவனது மரத்திற்குப் பின்னர், அவனது சீடனுக்கும் ஆன்மீக சாதனையில் தொய்வு நிலை ஏற்பட்டது. உடனடியாக, அவன் தன்னுடைய குரு அளித்த பெட்டியை திறந்து பார்த்தான். அதில், ஒரு வாசகம் எழுதப்பட்டு  இருந்தது. ‘இன்னொரு முறை முயற்சி செய்’ என்ற அந்த வாசகத்தின் படி, தன்னுடைய முயற்சியை தொடர்ந்தவனுக்கு ஞானம் கைவரப்பெற்றது.

ஒருவரது வாழ்க்கையில் குருவானவர், உபதேசம் மட்டுமே அளிக்க முடியும். எண்ணிய சாதனையை தனிப்பட்ட மனிதன்தான் செய்து உயர்வடைய வேண்டும்.

Share this story