பவானி கூடுதுறையில் பரிகார பூஜை : பொதுமக்களுக்கு அனுமதி

By 
Parikara Puja at Bhavani Complex Permission for the public

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. 

காவிரி, பவானி அமுதநதி சங்கமிக்கும் இங்கு, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து புனித நீராடி செல்வார்கள்.

பரிகாரம் :

மேலும், இறந்த முன்னோர்களுக்கு பரிகாரம் செய்ய, அமாவாசை நாட்களில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில் பவானி கூடுதுறை களை கட்டும். 

மேலும் ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் புனிதநீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

தடை :
 
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, நீர்நிலைகள் மற்றும் கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  

இதேபோல், கூடுதுறையிலும் பரிகாரம் செய்ய, புனித நீராடத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால், பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, பவானி கூடுதுறை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பரிகாரம் செய்யவும், ஆற்றில் புனித நீராடவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். அவர்கள் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

அனுமதி :

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில், பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ,பரிகாரம் செய்ய 3 பேருக்கும், ஈமக்கிரியை செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது தவிர, பக்தர்கள் மற்றும் புரோகிதர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு, பவானி கூடுதுறையில் நேற்று முதல் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story