பெருமாளின் தீர்த்தம் ஆனாள் 'சபரி'

By 
 Perumal's theertham became 'Sabari'

எந்த பெருமாள் கோவிலிலும், இறைவனுக்கு நீராட்டல் என்னும் திருமஞ்சனம் நடைபெற்றாலும், அங்கு அந்த நீராக சபரியே இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சபரி, ஒரு வேடுவ குலத்தைச் சேர்ந்த பெண். அவள், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது ராமபிரானைப் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வந்தவள். நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த தருணத்திற்காகவே காத்திருப்பவள். காலம் கடகடவென்று ஓடியதில், இப்போது தள்ளாத வயதை எட்டியிருந்தாள், சபரி. ஆனாலும் அவளுக்கு, தான் ராமபிரானைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை.

திருக்காட்சி :

கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனோடு காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்படி வசித்த போது, ராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டு விட்டாள். 

சீதையைத் தேடி, வனம் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள், ராமனும், லட்சுமணனும். அப்படி அவர்கள் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில்தான், சபரியின் குடிசையைத் தேடி அவர்கள் வந்தனர்.
 
தனக்காகவே காத்திருக்கும் சபரிக்கு, ராமபிரான் இப்போது நேரடியாக காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார். 
அவரைப் பார்த்ததும் செய்வதறியாது திகைத்த, அந்த மூதாட்டிக்கு எப்படி அவரை உபசரிப்பது என்று கூடத் தெரியவில்லை. 

அவ்வளவு பதற்றம், தன் மனதில் நிறைந்த இறைவனைக் கண்ட காரணத்தால் ஏற்பட்டது.

சபரியிடம் ஒரு செய்கை இருந்தது. ராமபிரானை என்றாவது ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் அவள், தினமும் வனத்தில் இருந்த மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து பாதுகாப்பாள். 
அதுவும், எந்த கனி சுவையாக இருக்கிறது என்பதைக் கடித்துப் பார்த்து, அதில் சுவை மிகுந்த கனியை பத்திரப்படுத்தி வைப்பாள். 

ராமன் தந்த வரம் :

அவளது அதீத அன்பின் காரணமாக, அந்தக் கனிகள் அனைத்தும் இன்று கனிந்ததுபோலவே இருந்தன. அந்த கனிகளையெல்லாம் எடுத்து வந்து, ராமருக்கும், லட்சுமணனுக்கும் உண்ணக் கொடுத்தாள்.

அந்த கனிகளின் சுவையில் மெய்மறந்து போனார், ராமபிரான். அதில், கனியின் சுவை மட்டுமா இருந்தது. காலம் காலமாக சபரி சேர்த்து வைத்திருந்த அன்பும் அல்லவா கலந்திருந்தது. சபரியின் அன்பில் நெகிழ்ந்து போன ராமபிரான், 'தாயே.. தங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள். நீங்கள் கேட்பதை நான் தருவேன்' என்றார்.

அப்போது அந்த மூதாட்டி, 'இறைவா.. நான் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டும். தினமும் என்னுடைய அன்பால் உங்களை நீராட்ட வேண்டும். அந்த பாக்கியத்தை எனக்கு அருளுங்கள்' என்றாள்.

அப்படியே ஆகட்டும் என்று கூறிய ராமபிரான், 'எனக்கு செய்யப்படும் வழிபாட்டின்போது என்னை நீராட்டும், தீர்த்தமாக நீயே இருப்பாய்' என்று அருளினார்.

ஆம், எந்த பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு நீராட்டல் என்னும் திருமஞ்சனம் நடைபெற்றாலும், அங்கு அந்த நீராக சபரியே இருக்கிறாள் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.

புல்லாங்குழலாக மாறிய சபரி :

ராமபிரான், சபரிக்கு இன்னொரு வரத்தையும் தர விரும்பினார். அதையும், சபரியே கேட்கும்படி பணித்தார். அதற்கு சபரி, 'இறைவா... நான் உங்கள் மீது கொண்ட அன்பை புரிந்து கொண்டு, எனக்கு காட்சி தர இவ்வளவு தூரம் வந்தீர்கள். நான் எச்சில்படுத்தி வைத்திருந்த கனிகளைக் கூட, எந்தச் சலனமும் இல்லாமல் உண்டு மகிழ்ந்தீர்கள். நானும் மறுபிறவியில் உங்கள் எச்சில்படும் பொருளாக இருக்க ஆசைப்படுகிறேன்' என்றாள்.

அதன்படியே, அடுத்த அவதாரத்தில் கண்ணனான அவதரித்த திருமால், தன்னுடைய கைகளில் புல்லாங்குழலாக சபரியை ஏந்திக் கொண்டார். 

அதை இசைப்பதன் மூலம், கண்ணபிரானின் எச்சில் சபரியின் மீது பட்டு, அவளைப் புனிதப்படுத்திக் கொண்டே இருந்தது.

Share this story