முருகப்பெருமானின் ஏழாம்படை வீடு.!

By 
Seventh house of Lord Murugan!

முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் உண்டு என்பது நமக்குத் தெரியும். மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அவரது 7-ம் படைவீடாக போற்றப்படுகிறது. 

இங்கு விநாயகரும், முருகப்பெருமானும் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்கள். இந்த ஆலயம் பற்றி இங்கே பார்ப்போம்..

* கோவையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மருதமலை முருகப்பெருமான் திருக்கோவில்.
 
* இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்த ஆலயம் இது. மலை மீதுள்ள முருகனை தரிசிக்க 837 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

* மருத மரம் நிறைந்த பகுதி என்பதால், இந்த மலை ‘மருதமலை’ எனப்படுகிறது. இங்கு அருள்பாலிப்பதால் முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயரும் உண்டு.

* சிவன்- அம்பாளுக்கு நடுவில் முருகன் இருப்பதை, ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு என்பார்கள். 

அந்த வகையில், முருகன் சன்னிதிக்கு வலதுபுறம் பட்டீஸ்வரர், இடதுபுறம் மரகதாம்பிகை சன்னிதிகள் உள்ளன.

* ஆலயத்தின் அடிவாரத்தில் ‘தான்தோன்றி விநாயகர்’ சன்னிதி உள்ளது. இவர் சுயம்பு மூர்த்தியாவார், உடல் இல்லாமல் யானை தலையோடு மட்டுமே காட்சி தருகிறார். இவருக்கு அருகில் முழு உருவ விநாயகர் சிலையும் உள்ளது.

* மூலவரான முருகப்பெருமான், ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக்காப்பு என தினமும் மூன்றுவித அலங்காரத்தில் காட்சி தருவார். 

அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இந்த மூலவரை தண்டாயுதபாணியாக சுய உருவத்தில் தரிசிக்க முடியும்.

* முருகப்பெருமானின் அருள்பெற்றவர், பாம்பாட்டி சித்தர். இவர் வடித்த சிலையே, தற்போது கோவில் மூலஸ்தானத்தில் உள்ளது.

* `ஆதி முருகன்’ சன்னிதி தனியாக உள்ளது. இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவருடன் வள்ளி- தெய்வானையும் சுயம்புவாக உள்ளனர். இவருக்கு பூஜை செய்யப்பட்ட பிறகே, மூலவருக்கு பூஜை செய்யப்படும்.

* அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கெரக்கட்டை ஆகிய ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்த மரத்தின் அடியில் ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ அருள்கிறார்.

* பாம்பாட்டி சித்தருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இவருக்கு, முருகன் பாம்பு வடிவத்தில் காட்சி தந்தார். 

அதனால், இங்குள்ள நாகர் உருவத்தை, முருகப்பெருமானாகவே நினைத்து வழிபடுகின்றனர்.

* இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘மருது சுனை’ என்று பெயர். ஒரு மருத மரத்தின் அடியில், இந்த சுனை உற்பத்தியாகிறது. இந்த தீர்த்தம்தான், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

* திருமண வரம், புத்திரப்பேறு வேண்டுபவர்கள், இங்குள்ள மரத்தில் மாங்கல்யக் கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

Share this story