பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா : 16-ந்தேதி கொடியேற்றம்..

By 
kol2

கொல்லங்கோட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒரே அம்மனுக்கு வட்டவிளை பகுதியில் மூலஸ்தான கோவலும், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் வெங்கஞ்சி பகுதியில் தூக்க திருவிழா நடைபெறும் கோவிலும் அமைந்துள்ளது.

திருவிழா நாட்களில் அம்மன் வெங்கஞ்சி கோவிலிலும், பிற நாட்களில் மூலஸ்தான கோவிலிலும் இருந்து அருள் பாலிக்கிறார். குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தை வரம் வேண்டியும், குழந்தை நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும் இங்கு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுவது கோவிலின் தனி சிறப்பு ஆகும்.

சுமார் 40 அடி உயரம் உள்ள 4 வில்கள் பொருத்தப்பட்ட தூக்க ரதத்தில், தூக்ககாரர்கள் 4 நேர்ச்சை குழந்தைகளுடன் கோவிலை வலம் வந்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகிறார்கள். இந்த விழாவில் கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான தூக்கத்திருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. வருகிற 16-ந்தேதி தூக்கத்திருவிழா தொடங்கி 25-ந்தேதி முடிவடைகிறது.

விழாவின் முதல் நாள் மாலையில் கொடியேற்று நிகழ்ச்சியை தொடர்ந்து கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகான் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திருவிழாவை தொடங்கி வைக்கிறார். இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள், குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார்(கிள்ளியூர் தொகுதி), நயினார் நாகேந்திரன்(நெல்லை தொகுதி), கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தூக்கத்திருவிழா 25-ந்தேதி நடக்கிறது. இதற்கான முன்பதிவு தேவஸ்தான அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதுவரை 700 பேர் தூக்க நேர்ச்சைக்கு முன்பதிவு செய்துள்ளனர். சுமார் 1200 குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story