'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' ஆண்டாள் தமிழ் ஆண்டாள்.!
 

By 
'Soodikkotta Sudarkkodi' Andal Tamil Andal.!

இலக்கியச் செழுமைக்கும் தத்துவம், பக்தி ஆகியவற்றிற்கும் உதாரணமாக போற்றப்படும் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களையும் ஆண்டாள் தனது 15 ஆம் வயதில் இயற்றியுள்ளார். 

இந்த இரண்டு நூல்களையும் படித்தால், ஆண்டாளின் தெய்வீகத் தன்மையையும் ஞானத்தையும் உணர முடியும். 

ஒரே பெண் ஆழ்வார் :

ஆண்டாள், தமிழகத்தில் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பாவை என்பது, மார்கழி மாதத்தில் எப்படி இருக்க வேண்டும். இறைவனை எப்படி வணங்கி அருளைப் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டாள் பாடிய நூல்.

இது மொத்தம் 30 பாடல்களைக்  கொண்டது, வைணவ பக்தி நூல்களின் தொகுப்பு 'நாலாயிர திவ்ய பிரபந்தங்கள்' என அழைக்கப்படுகின்றன. 

இதில், 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்புதான் திருப்பாவைப் பாடல்கள்.

அர்ஜுனனுக்கு பகவத் கீதையைக் கூறிவிட்டு வைகுந்தம் சென்ற கிருஷ்ண பகவான் தனது பகவத் கீதை, இவ்வுலக மக்கள் அனைவரையும் சென்றடைய திருவுளம் கொண்டான். வையகத்து மக்கள் எல்லாம் பெருமாளின் குழந்தைகளே; அவர்களுக்கும் எளிய முறையில் கீதையின் சரணாகதி தத்துவம் விளங்கச் செய்ய வேண்டும் என்று விரும்பிய பகவான், மஹாலட்சுமித் தாயாரிடம் 'நீ சென்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடேன்' என்று கூறுகிறார். 

'நீங்கள் அவதாரம் எடுத்த பொழுதெல்லாம் உங்களுடன் பிறவி எடுத்து எடுத்து இளைத்தேன். என்னால் ஆகாது' என்று மஹாலட்சுமித் தாயார் சொல்ல, 'அப்போது நான் சென்று குழந்தைகளைக் கரை சேர்க்கிறேன்' என்று பூமித் தாயார் வைகுண்டத்தில் இருந்து, பூலோகத்திற்கு ஆண்டாளாக அவதரித்துக் கோதை என்று பெயர் பெற்றாள். இங்கே, இவை குறித்த நிகழ்வுகள் பார்ப்போம்.

துளசி அருகே குழந்தை :

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்தார் பெரியாழ்வார். இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலர்த் தோட்டம் அமைத்தார், அத்தோட்டத்தில் செண்பகம், வகுளம், மல்லிகை, முல்லை ஆகிய மலர் செடி, கொடிகளுடன் துளசிச் செடியையும் வளர்த்து வந்தார். 

இவற்றைக் கொண்டு பின்னல், கண்ணி, கோவை ஆகிய அழகிய வடிவங்களில் மாலை கட்டி, அவ்வூரில் உள்ள வடபத்திரசாயிக்கு மாலை அணிவித்து வந்தார்.

ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அத்தோட்டத்தில் நன்கு வளர்ந்திருந்த துளசிச் செடியின் அடியில், பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். 

அக்குழந்தைக்கு சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டுக் குழந்தைக்குத் தானே தந்தையாக இருந்து வளர்த்தார்.

தனக்கென குடும்பம் இல்லாத பெரியாழ்வார், ஆண்டாளை இறைவன் கொடுத்த கொடையாக நினைத்து வளர்த்து வந்தார். 

கண்ணன் என் மணாளன் :

சிறுவயது முதல் வைணவ சமயம் சார்ந்த தனக்குத் தெரிந்த அனைத்தையும், தான் மகளாக வளர்த்த கோதைக்கு விஷ்ணுசித்தர் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். 

இதனால், இளம் வயதிலிருந்து கண்ணன் மீது அளவு கடந்த பக்தி பெருகியது. போகப் போக அது கண்ணன் மீது காதலாக மாறியது. அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்டாள் வளர்த்துக் கொண்டார்.

தமிழில் புலமை பெற்ற பெரியாழ்வார், தனக்குத் தெரிந்த அனைத்தையுமே கோதைக்கு சொல்லிக் கொடுத்தார். கோதை இளம் வயதிலேயே கிருஷ்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராகவும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். 

கண்ணனின் அவதாரக் கதைகளைக் கேட்டுக் கேட்டே வளர்ந்த கோதையோ, கண்ணன்பால் ஈர்ப்புக் கொண்டாள். கண்ணனையே கணவனாக வரித்தும் கொண்டாள். தன்னைக் கிருஷ்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தாள்.

அவனையே மணாளனாக வரித்த பின், அவனுக்கு தான் ஈடாக இருக்கிறோமா என்பதை அறிய, வடபத்திரசாயிக்கு மாலை போடும் முன், தான் போட்டு அழகு பார்த்தாள் கோதை. 

கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணு சித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை, அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து, அழகு பார்த்து, அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள்.

ஒவ்வொரு நாளும் இப்படி நடந்தது. தந்தைக்கு தெரியாமல் அவள் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக இருக்கிறேனா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்தாள். 

பின்னர், திரும்பவும் கொண்டுபோய் வைத்து வந்தாள். இதனால், கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. 

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி :

ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதைக் கண்ட அர்ச்சகர்கள், அதை எறிந்து விட்டு வேறு மாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறிவிட்டனர். பகவானின் சேவையில் தவறு வந்துவிட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். 

மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதைக் கண்டார்.

'மலர்களை எல்லாம் பறித்து, ஒரே மாலையாகக் கட்டிவிட்டதால், புது மாலை கட்ட, தோட்டத்தில் எஞ்சிய மலர்களும் போதாது. கோதை போட்டுக் கழித்த மாலையையும் பெருமாளுக்குப் போட முடியாதே' எண்ணியபடி இரவில் வெதும்பிய மனதுடனேயே தூங்கிவிட்டார் விஷ்ணு சித்தர். 

அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஒன்றும் அறியாதது போல, வழக்கமாகத் தனக்கு அணிவிக்கும் மாலை எங்கே எனக் கேட்கிறார். விஷ்ணு சித்தரோ நடந்த கதையைக் கூறி, நிர்மால்யமான மாலையை அணிவிக்க தன் மனம் ஒப்பவில்லை' என்று பதிலளித்தார். 

அதற்கு தனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே உகப்பானவை. அதனால், தினமும் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை எனக்கு சூட்ட வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

ஆண்டவனின் மனதையே கவர்ந்து ஆண்டுவிட்டதால், கோதை,  'ஆண்டாள்' என்றும், 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும் போற்றப்பட்டாள்.
*

Share this story