சுசீந்திரம் கோவில் தெப்பத்திருவிழா இன்று தொடக்கம் : 10 நாள் நிகழ்ச்சிகள்..

suchi

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 

அதுபோல், இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

கோவிலில் உள்ள சித்திர சபை மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 

விழாவில் நேற்று (வியாழக்கிழமை) மாலையில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுபடி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்று விழாவையொட்டி, காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 9 மணிக்கு மேல் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. 

தொடர்ந்து 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு தேவார இன்னிசை, 6.15 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை சாமி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், சமய சொற்பொழிவு, இரவு வாகனத்தில் வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

விழாவின் 9-ம் நாளான 29-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் திருத்தேர்வடம் தொட்டிலுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், சப்பர தேர் என மூன்று தேர்கள் உலா வருகின்றன. 

தேரோட்டத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். 

மாலை 6 மணிக்கு சாமி மண்டகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தா வர்ண நிகழ்ச்சி நடக்கிறது. 

விழாவின் நிறைவு நாளான 30-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் தெப்பத்திற்கு சாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. தெப்பக்குளத்தை சுற்றிலும் தெப்பம் 3 முறை வலம் வருகிறது. 

முதல் சுற்றினை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றினை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழதெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வருவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு வைபவம் நடைபெறுகிறது. 

Share this story