தஞ்சை பெரிய கோவில் : சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம்..

By 
tanj

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. 

பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வையாளர் செந்தில், சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 17-ந்தேதியும், அதைத்தொடர்ந்து மே 1-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
 

Share this story