பதில்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்..

By 
ramay3

ஒருமுறை ஆசிரியர் ஒருவர், தன் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர், தன் மாணவர்களிடம் ராமாயணத்துக்கும், மகாபாரத்துக்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டார். 

முதல் மாணவன், ராமாயணத்தில் நான்கு சகோதரர்களும், மகாபாரதத்தில் ஐந்து சகோதரர்களும் இருக்கிறார்கள், என்று பதில் சொன்னான். 

அடுத்த மாணவனோ, ராமாயணத்தில் ஒவ்வொரு சகோதரனுக்கும் ஒவ்வொரு மனைவி இருந்தனர். பஞ்சபாண்டவர்களுக்கோ திரௌபதி மட்டுமே மனைவியாக இருந்தாள், என்றான். 

அடுத்து அமர்ந்திருந்த மாணவி, ராமன் 14 ஆண்டுகள் காட்டில் வனவாசம் செய்தான். பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் செய்தார்கள் என்றாள். 

ராமாயணப் புத்தகத்திற்கு கறுப்பு அட்டை, மகாபாரதத்திற்கோ நீல அட்டை என்றான் ஒரு அதிபுத்திசாலி. கடைசியில் ஒருவன் சொன்னான். ராவணன், பெண்ணாசையால் அழிந்தான். துரியோதனன், மண்ணாசையால் அழிந்தான். 

ஒரு சாதாரணக் கேள்விக்கு எத்தனை விடைகள். எது சரியான விடை என்று உங்களால் சொல்ல முடியுமா? எல்லாமே சரி என்றுதான் சொல்வீர்கள். நீங்கள் ஒரு ஜாலியான மூடில் இருந்தால், கறுப்பு அட்டை, நீல அட்டை பதிலைக் கூட ரசிப்பீர்கள். நான் சொல்ல வந்தது இதுதான். வாழ்க்கையில் எல்லாக் கேள்விகளுக்கும் ஆளாளுக்கு ஒரு விடை வைத்திருப்பார்கள்.

அந்தந்த விடைகளை சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால், அதுதான் சரி என்ற முடிவுக்கு வருவீர்கள். அதனால் எது சரி, எது தவறு என்பதை விட்டுவிட்டு, எது உங்களுக்கு சரி என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும், நீங்கள் எது உங்களுக்குச் சரி என்பதைக் கண்டுபிடித்து விட்டால் போதும். வாழ்க்கை முழுவதும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுலபமாக, சுபமாகக் கழிப்பீர்கள் என்று கூறினார்.
 

Share this story