தேங்காய் சுடும் பண்டிகையின் ஐதீகம்
 

The epitome of the coconut shooter festival

ஆடி மாதத்தின் முதல் நாளில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். 

இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது.

ஐதீகம் :

அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி18-ம் நாளன்று முடிவுக்கு வந்தது. 

இந்த போரில், தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல்நாளில் மக்கள் அனைவரும் வேண்டி, அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின்போது, படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.

விநாயகர் முன் வழிபாடு :

இந்த பண்டிகையின்போது, புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு, ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள். அதன் ஒரு கண்ணில் துளையிட்டு, உள்ளே இருந்த தேங்காய் தண்ணீரை வெளியேற்றி, துளையின் வழியாக பச்சரிசி, பாசி பருப்பு, நாட்டு சர்க்கரை, அவல், எள், ஏலக்காய் கலந்த கலவையை இடுவார்கள்.

பின்பு முனை கூராக சீவப்பட்ட நீண்ட அழிஞ்சி மரக்குச்சியில் தேங்காயை செருகி, குச்சி, தேங்காய் மீது மஞ்சளை பூசி தீயிலிட்டு சுடுவார்கள். குச்சிகளுக்கும் மஞ்சள் அலங்காரம் உண்டு. கிராமங்களில், பொதுவாக அழிஞ்சில் குச்சிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் நன்றாக வெந்த பின்னர், டப் என்று வெடிக்கும். பின்பு சுடப்பட்ட தேங்காயை குச்சியுடன் எடுத்து சென்று விநாயகருக்கு முன்பு நிறுத்தி, உலகில் நன்மைகள் செழித்தோங்கவும், தீமைகள் அழிந்திட வேண்டும் எனவும் பொதுமக்கள் வழிபாடு நடத்துவார்கள்.

ஓடுகளை அகற்றிவிட்டு, அந்த தேங்காயை சரி சமமாக இரண்டாக உடைத்து, வணங்கி பிரசாதமாக சாப்பிடுவார்கள். ஆடி மாதத்தின் முதல்நாளில் இன்றைக்கும் பாரம்பரியமாக தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

மருத்துவக் குணம் :

சுட்ட தேங்காய்க்குள் உள்ள எள்ளு, பாசிப்பயறு, நாட்டுவெல்லம், அவல், பொட்டுக்கடலையுடன் தேங்காயின் சுவையும் இணைந்து அலாதியான ருசியைத் தரும்.

இந்த தேங்காய் உணவு வயிற்றுப் புண்களை ஆற்றும். புரதக்கூறுகள் நிறைந்த இந்த உணவு, உடலுக்கு வலிமை அளிக்கும். தேங்காய் சுடுவதற்குப் பயன்படும் அழிஞ்சில் குச்சியும் மருத்துவக் குணம் நிறைந்தது. சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒற்றுமையுடன் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர். நெருப்பில் சுட்ட பின்பு, அருகில் உள்ள விநாயகர் கோயில் படைத்து குடும்பத்தினர் ஒன்றுகூடி மிகுந்த மகிழ்ச்சியுடன் நெருப்பில் சுட்ட தேங்காயை அதனுள் இருக்கும் பூரணமும் உண்டு மகிழ்ந்தனர்.

திருச்செங்கோட்டில் ஆடி பிறப்பை முன்னிட்டு, பக்தர்கள் தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினார்கள். முன்னதாக தேங்காய் சுடுவதற்காக அழிஞ்சி குச்சிகள், பூரணம் எனப்படும் பச்சரிசி, பாசி பருப்பு, நாட்டு சர்க்கரை, அவல், எள், ஏலக்காய் கலந்த கலவைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.  இவற்றை பக்தர்கள் வாங்கி, அதிகாலையில்  தேங்காய் சுட்டு வழிபாடு நடத்தினார்கள்.

Share this story