திருநங்கைகளின் குல தெய்வமான கூத்தாண்டவரின் வரலாறு.. 

koovagam

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ளது, கூத்தாண்டவர் கோவில். திருநங்கைகள், இக்கோவிலில் உள்ள கூத்தாண்டவரை தங்களின் குலதெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர். 

இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். கூத்தாண்டவர் வரலாறு ஒரு திருநங்கையின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு என்றால், அது கூத்தாண்டவர் திருவிழாதான். அந்தளவிற்கு திருநங்கைகளின் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒரு சமுதாய சடங்கு அது. 

திருநங்கைகளின் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இத்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கென்று ஒரு வரலாறு உண்டு. 

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், போருக்கு முன்பாக யுத்த தேவதையை திருப்திப்படுத்த களப்பலி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

அதற்கு 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண் மகன் வேண்டும். இதற்கு தகுதியானவர்களாக இருந்தவர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணன் மற்றும் அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்த அரவான் ஆகியோர் மட்டுமே. அர்ச்சுனனும், கிருஷ்ணனும்தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள். அவர்கள் இருவரையும் இழக்க முடியாது என்பதால், அரவானை பலியாக்க முடிவு செய்யப்பட்டது. 

அர்ச்சுனனும், கிருஷ்ணனும் அரவானிடம் இதுபற்றி பேசினர். அரவானும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, "என் இறுதி ஆசையாக திருமண வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே பலிக்களம் புகுவேன்" எனக்கூறுகிறார். 

ஆனால் அரவானை கணவனாக ஏற்க, வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தவொரு பெண்ணும் முன்வரவில்லை. விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனை மணக்க எந்த பெண்தான் சம்மதிப்பாள். இப்படிப்பட்ட சூழலில் கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். ஓர் இரவு இல்லற வாழ்விற்கு பிறகு மறுநாள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அரவானை மணமுடித்த மோகினி, விதவைக்கோலம் பூணுகிறாள். இதுதான் அரவான் எனப்படும் கூத்தாண்டவரின் வரலாறு. 

இந்த கதையின் அடிப்படையில் தங்களை கிருஷ்ணரின் அவதாரமான மோகினியாக உணரும் திருநங்கைகள், திரளாக கூடி கொண்டாடும் விழாவாக கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா இருக்கிறது. இதனாலேயே இக்கோவிலை திருநங்கைகள், தங்களின் குல தெய்வமாக கருதுகின்றனர்.

Share this story