பிற தோஷம் அகற்றும் பிரதோஷம்.!

 The joy of removing other imperfections.!

மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். 

அந்த நாளில், நந்திதேவரையும் வில்வம் சார்த்தி, அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது பல நல்லதுகளை, சத்விஷயங்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். 

ஒவ்வொரு கிழமைகளில் பிரதோஷம் வரும். இங்கு எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும்போது, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

ஞாயிறு பிரதோஷம் :

சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு மறக்காமல் சென்று தரிசிக்க வேண்டும். 

இதனால் சூரிய பகவானின் அருள் கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

திங்கள் பிரதோஷம் :

பிரதோஷத்தில் ஸோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு கோயிலுக்குச் சென்று தரிசிப்பது சிறப்பு. 

இதனால், மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மனவலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம் :

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். 

மனிதருக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு. இதனால், செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும். பித்ரு தோஷம் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கும்.

எந்த ராசி, நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால், அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும்.

புதன் பிரதோஷம் :

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். 

இதனால், புதனால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதனால், அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். கலைகளில் சிறந்து விளங்குவர்.

வியாழன் பிரதோஷம் :

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்குச் சென்று, குருவுக்கு நிகரான சிவனாரை வணங்கவேண்டும். 

இதனால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்.

வெள்ளி பிரதோஷம் :

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று தரிசிக்க வேண்டும். 

இதனால், உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம்!

சனி மஹா பிரதோஷம் :

சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. 

எந்த திசை நடந்தாலும், சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம்.

ஏழரைச் சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று, சிவதரிசனம் செய்வது சிறப்பாகும்.

இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்' என்கிறது சிவாகமம். 

கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம் .

Share this story