விநாயகர் எழுதிய மகாபாரதம்.!

By 
The Mahabharata written by Ganesha!

வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில், மகாபாரத வரலாறு தோன்றியது. 

பிரம்மர், அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தரவிட்டார்.

பாடுகின்றவர் எழுதினால், பாடுகின்ற வேகம் தடைபடும். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார். விநாயகர்தான், அதற்கு ஏற்றவர் என்று முடிவு செய்தார்.

விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார். வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார்.

அதற்கு சம்மதித்த விநாயகர், நான் வேகமாக எழுதுவேன். நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா என்றார். 

வியாசர் அதுகேட்டு திகைத்தார். ஆகட்டும். நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப, நான் பாடுவேன். ஆனால், பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்றார்.

பொருள் தெரிந்து எழுதுவதென்றால், வேகமாக எழுத முடியாது. விநாயகர் சரி என்றார். வியாசர் பாட தொடங்கினார். 

விநாயகர், தமது கொம்பினால் மேரு மலையில் எழுதலானார். 60 லட்சம் கிரந்தங்கள் பாடினார். 

இதில், விநாயகருடைய எழுதும் வேகத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுக் கடினமான பதங்களை அமைத்து இடையே 8800 சுலோகங்கள் பாடினார்.

இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சிறிது சிந்திக்கும் பொழுது, பலப் பல ஸ்லோகங்களை வியாசர் மனதில் ஆயத்தம் செய்து கொண்டார்.

இவ்வாறு வியாசர் பாடிய அறுபது லட்சம் கிரந்தங்களில், 30 லட்சம் தேவருலகில் நின்றது. 

15 லட்சம் அசுரவுலகில் நின்றது. 14 லட்சம் யட்சவுலகில் நின்றது. ஒரு லட்சம் மட்டுமே பூவுலகில் நின்றது.

Share this story