திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் : 23-ந்தேதி வரை, விழா நிகழ்ச்சிகள்..

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ந்தேதி திருமொழித் திருநாள் தொடங்கி, வருகிற 12-ந்தேதி வரை, பகல் பொழுதில் நடக்கும் பகல்பத்து திருவிழா நடக்கிறது.
தொடர்ந்து, வருகிற 13-ந்தேதியிலிருந்து வருகிற 23-ந்தேதி வரை திருவாய்மொழித் திருநாள், இரவில் நடக்கும் ராப்பத்து திருவிழாவாக நடக்கிறது.
பரமபதம் வாசல் தரிசனம் :
பகல் பத்து திருவிழாவில், நேற்று வியாழக்கிழமை சக்கரவர்த்தித் திருமகன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து ஏணிக்கண்ணன், பரமபதநாதன், பகாசுரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளிக்கண்ணன், நாச்சியார் திருக்கோலங்களில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இதில், முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வருகிற 13-ந்தேதி வியாழக்கிழமை நடக்கிறது.
அன்று அதிகாலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உள்பிரகார புறப்பாடு, 4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் நடைபெறும்.
14-ந்தேதியிலிருந்து நடக்கும் ராப்பத்து நிகழ்ச்சியில் வேணுகோபாலன் திருக்கோலம், நம்மாழ்வார், திருவேங்கடமுடையான், நாச்சியார், ராஜமன்னார், கோவர்த்தனகிரி திருக்கோலத்தில் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார்.
19-ந்தேதி உற்சவர் முத்தங்கியில் அருள்பாலிக்கிறார்.
விழா நிறைவு :
வருகிற 22-ந்தேதி நம்மாழ்வார் திருவடி தொழல், 23-ந்தேதி இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
விழாவையொட்டி, வருகிற 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் பரமபத வாசல் தரிசனம் நடக்கிறது.
தொடர்ந்து, 22-ந்தேதி அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பரமபத வாசல் தரிசனம் செய்யலாம்.