மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

By 
Understand the nature of man.!

புகழ்பெற்ற துறவி அவர். அவருக்கு ஏராளமான மாணவர்கள். 

ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.

‘என்ன?’

‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’

‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’

‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில், முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!'

குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே..?'

‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?’

‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’

‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?’

‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!' என்றார்.

தன்னிலை புரிந்து
உலக வாழ்வை உணர்ந்து, பற்றற்று மனதை வசப்படுத்துபவர் யாரோ அவர் ஒளிர்கிறார். தெய்வத்தன்மை பெறுகிறார்.

Share this story