ஸ்ரீதேவி-பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் கோவில் : தல வரலாறு

Varadaraja Perumal Temple with Sridevi-Bhudevi Head History

800 ஆண்டுகள் பழமையானது ஸ்ரீதேவி-பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.

சிறப்புமிகு  இக்கோவில், வீரபாண்டிய மன்னன் ஆட்சியில் கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. இத்திருக்கோவில் பற்றி இங்கு பார்ப்போம்.

அறுங்கோண வடிவம் :

திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சங்காணி என்ற ஊர். 

இங்கு ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. 

800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், வீரபாண்டிய மன்னன் ஆட்சியில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 

இந்த ஆலயம் கோள வட்டம், சதுர வட்டம் எனப்படும் ‘துவிதள விமானம்'  அமைப்பில் காட்சியளிக்கிறது. இந்த அமைப்பை மேலே இருந்து பார்த்தால், அறுங்கோண வடிவில் அழகாக இருக்கும்.

இந்த ஆலயத்தில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சர்வ அலங்கார ரூபத்தில் காட்சியளிக்கிறார். இவரது வலது கரத்தில் ‘தன ஆகர்ஷண ரேகை’ உள்ளது. 

இதனால் பக்தர்கள், பொன்னோ, பொருளோ கொண்டு வந்து, பெருமாளின் வலது கரத்தில் வைத்து வழிபட்டு எடுத்துச் சென்று, வீட்டில் வைத்தால், அந்த பொருள் பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.
 
தல வரலாறு :

இந்தக் கோவிலின் பெருமையைப் பற்றி அறிந்த, நாயக்க மன்னர் ஒருவர், இங்கு வந்து இறைவனை தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் ஒருவர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 

மன்னர் வருகிறார் என்பதால், அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் கண்டது. பெருமாளை வழிபடுவதற்காக மன்னர் வரும் நாள் நெருங்கிவிட்டது. கோவில் அர்ச்சகர் பரபரப்பாக செயல்பட்டார். 

மன்னர் வருவதற்கு முன்தினம் இரவு, ராக்கால பூஜையை முடித்து நடையை சாத்திவிட்டு வீட்டிற்குச் சென்றார். 

மறுநாள் அதிகாலையில் எழ முயன்றவருக்கு, அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. கடுமையான காய்ச்சல் காரணமாக, அவரால் படுக்கையை விட்டு கொஞ்சம்கூட நகர முடியவில்லை.

காய்ச்சலின் வீரியம் உடலை பாடாய் படுத்தினாலும், ‘மன்னர் வரும் வேளையில் பூஜை செய்ய இயலாத நிலை ஏற்பட்டு விட்டதே. மன்னரின் கோபத்திற்கு ஆளாக நேருமே’ என்ற கவலையே அர்ச்சகரை வருத்தியது. 

தன் மீது பழி வராதபடிக்கு தன்னை காத்தருளும்படி பெருமாளை வேண்டிக்கொண்டார். இரண்டாம் நாள்தான் படுக்கையை விட்டே, அர்ச்சகரால் எழ முடிந்தது. 

உடனடியாக உடலை சுத்தம் செய்து கொண்டு, கோவிலை நோக்கிச் சென்றார். அங்கு அவரைப் பார்த்த அனைவரும், ‘மன்னர் வந்த நேரத்தில் சிறப்பாக பூஜை செய்து அசத்திவிட்டீர்கள். 

அதுவும், நீங்கள் பாடிய பாசுரங்கள் அனைத்தும் மிகப் பிரமாதமாக இருந்தது’ என்று புகழ்ந்தனர். அர்ச்சகருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

தன்னைப் புகழ்ந்தவர்களிடம், “என்ன சொல்கிறீர்கள்? இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், இன்றுதான் கோவிலுக்கு வருகிறேன்” என்றதும், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 

அவர்கள் அனைவருக்கும் அப்போதுதான் ஒன்று புரிந்தது. அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவருக்கு எந்த களங்கமும் வரக்கூடாது என்பதற்காக, பெருமாளே அர்ச்சகரின் உருவத்தில் வந்து, மன்னனுக்காக பூஜைகள் செய்ததோடு, தன்னைப் பற்றி தானே பாசுரங்களையும் பாடியிருக்கிறார். இதை நினைத்து அர்ச்சகர் உள்பட அனைவரும் மனமுருகிப் போயினர்.

ஐதீகம் :

இந்த ஆலய பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு, குறைவில்லாத செல்வம் வந்துசேரும் என்பது ஐதீகம். 

மேலும், ஆணவம், மாயை, காமம், வெகுளித்தனம், மயக்கம், சாபம், நோய், பீடை, கண்திருஷ்டி போன்ற 19 வகையான தோஷங்கள் நீங்கி, சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். 

தங்களது கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

இங்கு பெருமாளுக்கு அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி ராப்பத்து, பகற்பத்து சிறப்பான முறையில் நடைபெறும்.

Share this story