சைவ சித்தாந்தமும், சந்தான குரவர்களும்.!

By 
Veganism and saints!

சிவபெருமானை ஆதிகடவுளாகக் கொண்ட சைவ சமயத்தின் அன்பு நெறியையும், பக்தி நெறியையும் வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள் நாயன்மார்கள்.

மெய்கண்டார் :

சுவேதனப்பெருமான் என்ற இயற்பெயரைக் கொண்டவர், மெய்கண்டார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் வசித்து வந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தருக்கு, இறையருளால் மகனாகப் பிறந்தார். இவர் 2 வயதாக இருக்கும்போது, திருவெண்ணெய் நல்லூரில் இருந்த தனது உறவினர் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்தார். 

அப்போது, அகத்தியரைக் காணும் பொருட்டு, பொதிகை மலை நோக்கி ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தார், அகச் சந்தான குரவர்களில் ஒருவரான பரஞ்சோதி முனிவர்.

திருவெண்ணெய் நல்லூர் அருகே வந்தபோது, பூமியில் குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதைக் கண்டு தரைஇறங்கினார். அந்தக் குழந்தைக்கு, சிவஞான போதத்தை உபதேசித்தார். 

மேலும் தன்னுடைய குருவான சத்தியஞான தரிசினியின் பெயரை, தமிழில் மொழிபெயர்த்து ‘மெய்கண்டார்’ என்று சூட்டினார். 

சந்தான குரவர்களில், முதன்மையானவராக போற்றப்படுபவர், இந்த மெய்கண்டார். 

சிவஞான போதம் :

திருக்கயிலாய பரம்பரை என்று அழைக்கப்படும், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற, இவரே காரண கர்த்தாவாக இருந்தார். தன்னுடைய குருவிடம் பெற்ற உபதேசத்தை ‘சிவஞான போதம்’ என்ற நூலாக இயற்றினார். 

இந்த நூலை தன்னுடைய சீடர்களுக்கும் உபதேசம் செய்து வந்தார், மெய்கண்டார். அவரிடம் 49 பேர், சீடராக இருந்து உபதேசம் பெற்று வந்தனர். அவர்களில் தலைமைச் சீடராக இருந்தவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். 

ஒரு ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர நாளில், திருவெண்ணெய் நல்லூரில் மெய்கண்டார் முக்தி அடைந்தார். அங்கு அவருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது.

அகமும் புறமும் :

நாயன்மார்கள் போல, அறிவு நெறியை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், ‘சந்தானச்சாரியார்கள்’ என்று அழைக்கப்படும் ‘சந்தான குரவர்கள்’. இவர்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது ‘அகச் சந்தான குரவர்கள்’, ‘புறச் சந்தான குரவர்கள்’.

திருநந்தி தேவர், சனத்குமாரர், சத்திய ஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் ‘அகச் சந்தான குரவர்கள்’ ஆவர். 

இவர்கள் நான்கு பேரும் திருகயிலாயத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதால், இவர்களை ‘அகச் சந்தான குரவர்கள்’ என்று அழைக்கின்றனர். திருக்கயிலாய பரம்பரை என்பது திருநந்தி தேவரை குருவாக கொண்டு தொடங்கப்பட்டது.

அகச் சந்தான குரவர்களில் ஒருவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியர் ஆகிய நால்வரும் ‘புறச் சந்தான குரவர்கள்’ ஆவர்.

Share this story