வேளாங்கண்ணி பேராலய விழா : டி.வி.யில் கண்டுகளிக்க ஏற்பாடு

'வருகிற 29-ந்தேதி தொடங்கும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவை, தொலைக்காட்சி-சமூக வலைதளங்களில் கண்டுகளிக்க வேண்டும்' என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா, வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல், அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில், கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் பாதை யாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் வந்து செல்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக, வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பக்தர்கள் பாதை யாத்திரையாகவும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக வருவதை தவிர்க்க வேண்டும்.
இதற்குப் பதில், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆராதனை நிகழ்ச்சிகளை, பக்தர்கள் தொலைக்காட்சி, செய்திதாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டுகளிக்கலாம்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாதை யாத்திரையாகவோ, வாகனங்கள் மூலமாகவே பக்தர்கள் வருவதை தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
*