'நமசிவாய' என்பதன் பொருள் என்ன?
 

By 
What is the meaning of 'Namasivaya'

'நமசிவாய' என்பதற்கு, சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். 

நமசிவாய என்று ஜெபித்து வர, சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அகம் மற்றும் புறச்சாதனங்கள் :

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். 

திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம். இம்மந்திரமானது, உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால், நம்முள் இருந்தே நமக்குப் பயன் தருவதாக இருக்கும். 

மந்திரங்கள் பல இருந்தாலும், அவற்றில் தலையாயது பஞ்சாக்கர மந்திரம் என்பர். வேத ஆகமங்களில், நடுநாயகமாக நிலை பெற்றிருப்பது பஞ்சாக்கர மந்திரமே. 

ரிக், யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில், நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம். 

அதன் நடுநாயகமாக இருப்பது, ருத்திர ஜெபம். ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம், நம சோமாயச நமசிவாய என்பதாகும்.

இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும், பலமுறை உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.

மூவரின் திருமுறைகள் :

மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-வது திருமுறைகள் அப்பர் அருளியவை. 

அவற்றின் நடுவில் அமைந்துள்ளது ஐந்தாவது திருமுறை. அதன் நடுவில் இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. 

அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில், சிவாய நம என்ற பஞ்சாக்கர மந்திரம் நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுகிறது. 

பிரணவத்தின் விரிவு :

ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம. ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும். அவ்வொலியிலிருந்தே, அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது பஞ்சாக்கர மந்திரமே. 

உயிர்கள் என்று துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்களை துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக திருவைந்தெழுத்தை அருளினார்.

Share this story