கலியுகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? : பாண்டவர்க்கு, கிருஷ்ணர் உரைத்த விளக்கம

By 
 What will Kali Yuga look like  To the Pandavas, the commentary narrated by Krishna

துவாபர யுகம் முடியும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. அடுத்ததாக, கலியுகம் பிறக்க இருந்தது. 

அந்த கலியுகம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று அறிந்துகொள்ள பலரும் பேராவல் கொண்டிருந்தனர். அதுபோலவே, பாண்டவர்களில் தர்மனை தவிர்த்து, மற்ற நால்வருக்கும் அந்த ஆர்வம் அதிகமாக இருந்தது.

ஸ்ரீகிருஷ்ணர் விளக்கம் :

பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய அந்த நால்வரும் கிருஷ்ணனிடம் சென்று, 'மைத்துனரே.. துவாபர யுகம் முடிந்து, கலியுகம் பிறக்கப்போவதாகச் சொல்கிறார்கள். 

அந்த கலியுகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எங்களுக்கு விளக்க முடியுமா?' என்று கேட்டனர்.

'நீங்கள் நால்வரும் திசைக்கு ஒருவராக வனத்திற்குள் செல்லுங்கள். அங்கே நீங்கள் பார்க்கும் ஆச்சரியமான விஷயத்தைப் பற்றி என்னிடம் வந்து சொல்லுங்கள். அதில்தான் கலியுகம் என்ற எதிர்கால வாழ்வு அடங்கியிருக்கிறது' என்றார் கிருஷ்ணர்.

* நால்வரும் திசைக்கு ஒருவராக வனத்திற்குள் சென்றனர். பீமன், தான் சென்ற திசையில் 5 கிணறுகள் இருப்பதைக் கண்டான். நடுவில் ஒரு கிணறும், அதைச் சுற்றி நான்கு கிணறுகளும் இருந்தன. 

சுற்றியிருந்த நான்கு கிணறுகளிலும் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குடிப்பதற்கு இனிமையாகவும் இருந்தது. 

ஆனால், நடுவில் இருந்த கிணற்றில் ஒரு துளி நீர் கூட இல்லை.

* அர்ச்சுனன் சென்ற திசையில், குயிலின் இனிமையான இசை கேட்டது. அதை ரசித்தபடியே, ஒலி வந்த திசை நோக்கிச் சென்றான். 

அங்கு அவன் கண்ட காட்சி, அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனிய குரலால், ஒலி எழுப்பிக்கொண்டிருந்த குயில், தன்னுடைய அலகால், ஒரு முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது.

* சகாதேவனும் தான் சென்ற இடத்தில், ஒரு காட்சியைக் கண்டான். ஒரு பசு, தன்னுடைய கன்றை அதன் அரவணைப்பில் வைத்திருந்தது. பாச மிகுதியால் தன்னுடைய கன்றை நாக்கால் தடவிக்கொடுத்துக் கொண்டே இருந்தது. 

ஆனால், பசு நாக்கால் தடவிக் கொடுத்த இடம் முழுவதும் புண் உண்டாகி, வலி பொறுக்க முடியாமல் கன்று கதறிக்கொண்டிருந்தது. 

அதைப் பொருட்படுத்தாத பசு, மீண்டும் தன் நாக்கால் கன்றை தடவிக்கொண்டே இருந்தது.

* நகுலன் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு ராட்சதப் பாறை மலை உச்சியில் இருந்து உருண்டு வந்தது. 

மிகப்பெரிய மரங்கள், மிகப்பெரிய பாறை இடுக்குகள் என அனைத்தையும் தகர்த்து எறிந்து கொண்டே உருண்டோடி வந்த அந்த பாறை, கடைசியில் ஒரு சிறிய செடியில் தட்டி நின்றது. அதைக் கண்டு நகுலன் ஆச்சரியப்பட்டுப் போனான்.

பீமன் :

பின்னர், நால்வரும் கிருஷ்ணன் முன்பாக நின்றனர். பீமன், தான் கண்ட கிணறுகளைப் பற்றிச் சொன்னான். அதைக் கேட்ட கிருஷ்ணன், 'பீமா கலியுகம் இப்படித்தான் இருக்கப்போகிறது. நான்கு கிணறுகள்தான், செல்வந்தர்கள். நடுவில் உள்ள கிணறு ஏழை. 

செல்வந்தர்களிடம் அந்த நான்கு கிணறுகளில் இருந்ததுபோலவே, தேவைக்கு அதிகமாக செல்வம் நிரம்பி இருக்கும். 

ஆனால், அதில் இருந்து சிறிதளவு கூட, வறுமையில் வாடும் ஏழைகளுக்குத் தர மாட்டார்கள். ஏழைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள்' என்றார்.

அர்ச்சுனன் :

அர்ச்சுனன், தான் கண்ட காட்சியை கிருஷ்ணரிடம் சொன்னான். அதற்கு விளக்கம் அளித்த அவர், 'அர்ச்சுனா.. கலியுகத்தில் உள்ள மத குருமார்கள், அந்த குயிலைப் போலத்தான் இருப்பார்கள். 

தூரத்தில் இருந்து பார்க்கும்போது, குயிலின் இனிமையான குரல் ஒலித்ததே, அதுபோலத்தான் இந்த மத குருமார்களும் இனிமையாக போதனை செய்வார்கள். 

ஆனால், அவர்கள் அருகில் சென்று பார்த்தால்தான் தெரியும். குயில் முயலைக் கொத்தியது போல, குருமார்களும் மக்களை அழித்துக் கொண்டிருப்பார்கள். 

மத குருமார்கள் உயர்ந்த பீடத்தில் இருந்தாலும், அதற்கேற்ற செயல்பாடுகள் அவர்களிடம் இருக்காது' என்றார்.

சகாதேவன் :

தன் கன்றை, தாய் பசுவே காயப்படுத்திய காட்சியைப் பற்றி சகாதேவன் கூறிவிட்டு, அதற்கு விளக்கம் கேட்டான். 'சகாதேவா.. கலியுகத்தில் வாழும் பெற்றோர்கள் இப்படித்தான் இருப்பார்கள். ‘என் பிள்ளைகளை நான் கவனமாக பாதுகாக்கிறேன். 

அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக்குகிறேன்’ என்று சொல்லிச் சொல்லி, அவர்களை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்பவர்களாகத்தான் கலியுகத்தில் பெற்றோர்கள் இருக்கப்போகிறார்கள்' என்றார் கிருஷ்ணர்.

நகுலன் :

இறுதியாக நகுலனின் முறை வந்தது. அவன் தான் கண்ட காட்சியை எடுத்துரைத்தான். 'நகுலா நீ கண்ட ராட்சதப் பாறை போன்றுதான், கலியுகத்தில் வாழப்போகும் இளைஞர்கள் இருக்கப்போகிறார்கள். இளைஞர்களான அந்த ராட்சதப் பாறை, பெரிய மரங்களான ஆசிரியர்களுக்கும் அடங்காது. 

மிகப்பெரிய பாறை இடுக்குகளாக இருக்கும் பெற்றோருக்கும் அடங்காது. இப்படி எதற்கும் அடங்காமல், அனைவரையும் எடுத்தெறிந்து விட்டு, தன் மனம் போன போக்கில் இளைஞர்கள் போவார்கள். 

ஆனால், அவர்களை தடுத்து நிறுத்த சிறிய செடியாக இருக்கக்கூடிய ஆன்மீகம்தான் உதவி செய்யும்' என்றார் கிருஷ்ணர்.

யார் உயர்ந்தவன்? :

மேலும், கிருஷ்ணர் கூறும்போது, 'கலியுகத்தில் பிறர்நலம் பேணி வாழ்கிறவர்கள் இருக்க மாட்டார்கள். தர்மத்தின் வழி நடக்கும் யுகமாக கலியுகம் இருக்காது. 

ஆனால், எவன் ஒருவன் தன்னை அறிந்து கொள்கிறானோ, அவன் கலியுகத்தில் உயர்ந்தவனாக மாறுவான்' என்றார்.

Share this story