பிறவிக்கடன் தீர்வது எப்போது?
 

By 
pari

பிறவிக்கடன் பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும் போது கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்து வருகிறது. 

அதே போல் பூமியை விட்டுச் செல்லும் போதும் கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச் செல்ல முடியும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் உள்ள இடைபட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையை கலைந்து கர்ம பந்தத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். 

ஒரு மனிதனுக்கு வினை அதிகரித்தாலும் குறைந்தாலும் தன்னுடைய கர்மப் பதிவில் தொடர்புடைய உயிர், பொருள் காரகத்துவங்களிடம் மட்டுமே வாழ்நாள் இருக்கும். பூமியில் கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்தாலும் ஒருவருடைய கர்மப் பதிவில் சில குறிப்பிட்ட உறவுகள், நட்புகள் பழக்கத்தில் இருக்கும். 

மனிதர்களை சுற்றி உள்ள பொருள் காரகத்துவங்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்கும் உரிமையை தந்த பிரபஞ்சம் ஏன் உயிர் காரகத்துவங்களான தாய், தந்தை,சகோதரர், சகோதரி, மனைவி,கணவன், பிள்ளைகளை, தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கர்மாவோடு தொடர்புடைய உறவுகளால் ஒன்றை நாம் பெற்றுக் கொள்கிறோம், அல்லது இழக்கிறோம். 

இந்த கர்மாவின் தொடர்ச்சியில் சில உறவுகள் கர்ம பந்தமாகிறது. பல உறவுகள் கர்ம வினையாகிறது. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.சிலருக்கு நல்லது செய்கிறோம். பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே 'ருண பந்தம்' எனப்படுகிறது. 

ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல. ஒருவரிடம் இருந்து பெற்ற அன்பும் உதவியும் கூட கடன் தான். ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்பிற்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால் ருண பந்தம் கர்ம வினையாக மாறி பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மிகச் சுருக்கமாக பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறும் போது பிறவிக் கடன் தீராது. பிறவிக் கடனை எளிதில் தீர்க்க முடியாது. மீண்டும், மீண்டும் அவர்களுடன் பிறந்து அன்பால் உடல் உழைப்பால் பிரதி உபகாரம் செய்தால் மட்டுமே பிறவிக் கடனை தீர்க்க முடியும். 

ஒரு மனிதன் உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்களுக்கு கூட பிறவிக் கடனை திரும்பச் செலுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறலாம். ஆனால் நம்மை பெற்ற, நமக்கு உடலும், உயிரும் கொடுத்த தாய், தந்தைக்கு செலுத்த வேண்டிய பெற்ற கடனை யாராலும் எளிதில் தீர்க்க முடியாது. 

லக்னம், ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். பிறவிக் கடன் முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டால் மறுபிறவி எடுக்க முடியாது. மனிதர்களாய் இந்த பிறவியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் தீர்க்க முடியாத பிறவிக் கடனில் நீந்துபவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போது போதிய வசதி வாய்ப்பு இருந்தும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தவறியவர்கள் மறுபிறவியில் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இன்றி வறுமையில் வாழ்வார்கள். பெற்றோர்களை தன் சுய நலத்திற்காக தனக்கு அடிமையாக நடத்துபவர்கள் மறு பிறவியில் அடிமைத் தொழில் செய்து கஷ்ட ஜீவனம் நடத்த வேண்டி வரும். 

பெற்றோர்களை சுமையாக கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் மறு பிறவியில் வீடு, வாசலை இழந்து தவிப்பார்கள்.பெற்றோர்களை மதிக்காமல் குல மரபை கடைபிடிக்கத் தவறியவர்கள் மறுபிறவியில் பிறந்த குலம், குலதெய்வம் தெரியாமல் அவதிப்படுவார்கள். 

ஜனன கால ஜாதகத்தில் ஆறாமிடம் மற்றும் ஒன்பதாமிடத்திற்கு சம்பந்தம் இருப்பவர்கள் தீராத, தீர்க்க முடியாத பிறவிக் கடனை அதிகம் சுமக்கிறார்கள். உயிருடன் வாழும் பெற்றோர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வாழ வேண்டும். 

இறந்த பிறகு எத்தனை முறை ஊரை கூட்டி திதி கொடுத்து விருந்து போட்டு தங்கள் பாசத்தை வெளிக்காட்டினாலும் பயன் இல்லை. இந்த வகை பித்ரு தோஷம் எவ்வளவு திதி, தர்பணம் கொடுத்தாலும் போகாது என சாஸ்திரம் கூறுகிறது. 

Share this story