எதற்காக இத்தனை கடவுளர்கள்? : சுவாமி விவேகானந்தர் விளக்கம்
 

By 
Why so many gods  Description of Swami Vivekananda

இந்து மதத்தில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், அம்மன் உள்பட இன்னும் ஏராளமான தெய்வ வழிபாடுகள் இருக்கின்றன.

இந்து மதத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, ‘எதற்காக இத்தனை கடவுளர்கள்?’ என்ற கேள்வி எழுவது நியாயமே. இதற்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்துள்ள விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

உங்கள் இந்து மதத்தில் இத்தனை கடவுள்களா?, யார் உங்களின் உண்மைக் கடவுள்?, சிவனா?, விஷ்ணுவா?, முருகனா?, விநாயகனா? காளியா?, இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைத்தான் நீங்கள் வழிபடுவீர்கள்? என்பது பலரது கேள்வி. 

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இந்து மதத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். 

சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள். விஷ்ணு புராணம் படித்தால் விஷ்ணுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறுவிதமாக இருக்கலாம்.

முதலில், இந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ளவேண்டும். 

எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரணப் பெயர். சிவா என்றால் புனிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்ணு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்கக் கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன். ராமன் என்றால் ஒளி மிக்கவன். 

இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தன்மையை குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. யோசித்துப் பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்துப் பெயர்களும் பொருந்தும் அல்லவா?

கீதையில் கிருஷ்ணன் 'யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது' என்று சொல்கிறார். இங்கே கிருஷ்ணன் என்பவர், புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவர் மட்டும் அல்ல. அவர் பரமாத்மா என்னும் அனைத்திலும் வியாபித்திருக்கும் இறைவன். 

இன்னும் சொல்லப்போனால், இறைவன் நம் எண்ணிக்கைகளுக்குள் அடங்க மாட்டான். ஒருமை, பன்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். 

அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணித் தீர்க்க முடியாது.

நீங்கள் ஒன்று என்று நினைத்தால், ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால், பல தெய்வங்களாகக் காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால், இல்லாமலும் இருப்பான். 

புராணங்கள் எனப்படும் தெய்வீகக் கதைகள், சாமானிய மனிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விஷயங்களை விவரித்து, அதன்மேல் ஓர் ஈர்ப்பு ஏற்படும் வகையில், சுவாரசியத்தை கூட்டுகின்றன. 

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. 

இறைவனுக்கு எண்ணிலடங்காத குணங்கள் அல்லது தன்மைகள் இருக்கின்றன. ஆகவே, எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறார்கள்' என விவேகானந்தர் கூறினார்.

Share this story