குரு பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்..

By 
guru87

சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி (22.4.2023) சனிக்கிழமையன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் பதிகின்றது. 

'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். அந்த இடங்களின் மூலம்  அதிகப்பலன்கள் கிடைக்கும். 

மேஷத்திற்கு குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெற்று புதனுடன் இணைந்து புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். சுக்ரன் மற்றும் சனி தங்களது சொந்த வீடுகளில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள். 

இந்த குருப்பெயர்ச்சி நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாகவே அமையும். குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு. 

குரு தன ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம். மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். பதவி வாய்ப்பு கைகூடும். செல்வாக்கு உயரும். 

மேஷத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். வக்ர காலத்தில் சிலருக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். இதற்கிடையில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் 8.10.2023-ல் ஏற்படுகின்றது. 

ஜென்ம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக கன்னிக்கும், அர்த்தாஷ்டம குருவாக மகரத்திற்கும், விரய குருவாக ரிஷபத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம்பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றில் உள்ள தடைகள் அகன்று தக்க விதத்தில் பலன் கிடைக்கும். 

இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு பகவான் சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற வீட்டிற்குள் வருகின்றார். ராகுவோடு குரு இணைவதால் குருவிற்குரிய முழுமையான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னரே கிடைக்கும்.


..................

Share this story