காவல்-தீயணைப்புத்துறைக்கு 101 புதிய அறிவிப்புகள் : முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார் 

 

poli7

சட்டசபையில் காவல் துறை, தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவாக பதிலளித்து பேசினார். அப்போது 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

* நடுத்தர வகை காவல் நிலையங்கள்-பிரிவுக்காக பல்வகை கையடக்க கணினி வழங்கப்படும்.

* 332 காவல் நிலையங்களுக்கு தலா மூன்று என்ற எண்ணிக்கையில் 996 பல்வகை கையடக்க கருவிகள் வழங்கப்படும்.

* சென்னை காவல்துறையில் உள்ள பாதுகாப்பு பிரிவுக்கு வெடிகுண்டுகள் கண்டு பிடித்து செயலிக்க செய்யும் புதிய கருவிகள் வழங்கப்படும்.

* சென்னை மாநகரில் 2 ஆயிரம் சி.சி.டி.வி. கேமரா நிறுவப்படும்.

* ஒருங்கிணைந்த வாகன சோதனை மையங்களில் போலீசாருக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

* தவறான பாதையில் வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்க மூன்று வழித்தடங்களில் 300 தானியங்கி வாகன எண்ணை பதிவு செய்யும் கேமராக்கள் நிறுவவும், மோட்டார் வாகன விதி மீறலுக்கான வழக்குகளை பதிவு செய்ய 30 புதிய போக்குவரத்து சிக்னல்களில் வாகன எண்ணை பதிவு செய்யும் கேமராக்கள் ரூ.19.27 கோடி செலவில் வாங்கப்படும்.

* சென்னையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 57 போக்குவரத்து சிக்னல்கள் மாற்றப்படும்.

* சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், தீயணைப்பு கருவிகள் நிறுவப்படும். * சென்னை மத்திய குற்றப்பிரிவில் புலனாய்வு அதிகாரிகளுக்கு 40 மடிக்கணினிகள் வாங்கப்படும்.

* குற்றவாளிகளை கைது செய்யும் போது காவலர்கள் தாக்கப்படும் சம்பவங்களை தடுக்க ரிமோட் மூலம் கை விலங்கு போட வசதியாக 25 ரிமோட் கைவிலங்கு கருவிகள் வாங்கப்படும்.

* கிரிப்மோ கரன்சி மோசடியை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் கருவிகள் வாங்கப்படும்.

* தாம்பரம் அருகே கிளாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் காவல் நிலையம் அமைக்கப்படும். அங்கு பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படுவதையொட்டி இந்த காவல் நிலையம் அமைக்கப்படுகிறது.

* வானகரம், மேடவாக்கம், அம்பத்தூர், புதூர் ஆகிய இடங்களில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

* அணைக்கட்டு, மார்த்தாண்டம், விக்கிரவாண்டி ஆகிய 3 புதிய காவல் கோட்டங்கள் உருவாக்கப்படும். * தென்காசி மாவட்டம் புளியறை, பரமக்குடி, நாச்சியார்கோவில், சோழபுரம், பெரும்பாக்கம், தாம்பரம், ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

* கடலூர், திருபாதிரிபுலியூரில் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் புதிதாக கட்டப்படும்.

* 137 காவல் நிலைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும். * தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளுக்கு சட்ட கருத்தை வழங்கவும், அரசு வக்கீல் தரத்தை உதவும் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனரகத்தில் உருவாக்கப்படும்.

* காவலர் பயிற்சி கல்லூரியில் பணியாற்றும் அதிகாரப்பணி விரிவுரையாளர் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும்.

* ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர போலீசாருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் உணவுப்படி வழங்கப்படும்.

* அனைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும்.

* சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் போலீசார் தங்குவதற்கு மகளிர் காவலர் விடுதி கட்டப்படும்.

* ஆலந்தூர், கொண்டித்தோப்பில் உள்ள போலீஸ் குடியிருப்புகளில் உடற்பயிற்சி கூடம், நூலகம், கல்வி மைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* திருநெல்வேலி வட்டார தடயஅறிவியல் ஆய்வகத்தில் புதிதாக மரபணு ஆய்வு பிரிவு உருவாக்கப்படும்.

* மதுரையை தலைமையிடமாக கொண்டு தீயணைப்புத் துறையில் தென் மண்டலத்தினை இரண்டாக பிரித்து திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்பது உள்பட 101 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

 

Share this story