166 குற்றவாளிகள் சுட்டுக் கொலை : யோகி ஆதித்யநாத் தகவல் 

By 
yogi3

காவலர் நினைவுத் தினத்தையொட்டி உத்தர பிரதேசத்தில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், நிகழ்ச்சியில் பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது.

கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 4,453 பேர் காயமடைந்தனர்.

காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆயுதப்படை காவலர்கள், தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this story