ஆண்டுக்கு 3 சிலிண்டர், தினமும் அரை லிட்டர் பால் இலவசம் : பாஜக தேர்தல் வாக்குறுதி..

By 
kar5

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும். போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும்.

ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும். உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும். மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும்.

பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில்,

'இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார். காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 
 

Share this story