பொதுமக்களுக்கு 3 முக்கிய செய்திகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

By 
3 Important News for the Public Speech by Chief Minister MK Stalin

சிறார்களுக்கான, கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாவது :

இன்று 3 முக்கிய செய்திகளை உங்களுக்கு சொல்லப் போகிறேன். 

கவனம் :

ஒன்று-ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசில் இருந்து உருமாறி இருந்தாலும், முந்தைய வைரசை விட புது வைரசின் நோய் தாக்க தன்மை குறைவு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது ஒரு ஆறுதல் அளிக்கும் செய்திதான்.

ஆனால், முந்தைய வைரசை விட ஒமைக்ரான் தொற்று பல மடங்கு வேகமாக பரவக்கூடியது. அதனால்தான், இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

ஏனென்றால், இதன் பரவல் வேகம் அதிகம். நோயின் தாக்கம் தமிழகத்தில் நிச்சயமாக அதிகரிக்க கூடும். ஆனால், அதை தடுப்பதற்காக நமக்கு முன்பு இருக்ககூடிய கேடயம் முககவசம்தான்.

பொது இடங்களில் போகும் போதும் கூட்டமான இடங்களுக்கு செல்லும் போதும், நிச்சயமாக முகக்கவசத்தை அணிந்தே தீர வேண்டும். 

அது மட்டுமல்ல, சமூக இடைவெளியையும் கடைபிடித்தாக வேண்டும். அதுதான் என்னுடைய முக்கிய செய்தியாக நான் அதில் குறிப்பிட்டு சொல்லி இருந்தேன்.

அடுத்து, ஒமைக்ரான் வைரஸ் உருமாறி இருந்தாலும் நமது நாட்டில் கொடுக்கப்பட கூடிய தடுப்பூசிகள் நல்ல நோய் தடுப்பை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

தடுப்பூசியால் கிடைக்கும் நோய், எதிர்ப்பு சக்தியால் புது வைரஸ் தாக்கினால்கூட நோய் தாக்கம் குறைவானதாக இருக்கும்.

அதோடு தடுப்பூசி போட்டவர்களின் இறப்பு விகிதமும் மிக மிக குறைவு என்பதைதான் மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உயிர் காக்கும் தடுப்பூசியை ஒவ்வொருவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.

தொற்று அதிகரிப்பு :

அமெரிக்காவில் தினமும் 5 லட்சம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் புது வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லை என்று சொன்னாலும், இப்போது அந்த நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

அதேபோல் கேரளா, மகாராஷ்டிரா போன்ற பக்கத்து மாநிலங்களில் கூட தொற்று அதிகரித்து வருகிறது. 

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மக்கள் இயக்கம் :

எனவே, தமிழ்நாட்டிலும் தொற்று அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில், அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். அதனால், நமது அரசு தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றி இருக்கிறது.

மக்களாகிய நீங்கள் அந்த இயக்கத்தில் இணைந்து கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது எனது 2-வது செய்தி.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 

நிச்சயம் 2 டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். 

உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக கெஞ்சி, உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இதுதான் நான் சொல்லும் 3-வது செய்தி.

ஆகவே, முதலமைச்சர் என்கிற முறையில், மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து உங்களை அன்போடு மீண்டும் மீண்டும் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

அதேபோல், பொது இடங்களில் நிச்சயமாக, உறுதியாக முகக்கவசத்தை நீங்கள் அணிய வேண்டும். 

சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ளுங்கள்.

ஒத்துழைப்பு தேவை :

அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு முறைகளை முறையாக கடைபிடியுங்கள். நமது அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வோம். 

புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம் என்ற உறுதியை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.

வரக்கூடிய கால கட்டத்தில், தொற்று நோயில் இருந்து விடுபட்டு இருக்கக் கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். அதற்கு, உங்களுடைய ஒத்துழைப்பு நிச்சயம் தேவைப்படுகிறது.

என்னதான் அரசு நினைத்தாலும், வெற்றி பெற முடியாது. அரசோடு பொதுமக்களாகிய நீங்களும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு கையால் தட்ட முடியாது. இரண்டு கைகளால்தான் தட்ட முடியும். எனவே நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார்.

Share this story