இன்னும் அகதிகள் முகாமில் 3 பேர் இருப்பது தேச நலனுக்கு எதிரானது: திருமாவளவன்

By 
thiruma3

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு எம்.பி.திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கைது செய்யப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு விடுதலையான 4 பேரும் தங்களுடைய தாயகதுக்கு திரும்பவில்லை. சிறையில் இருந்து விடுதலை பெற்றாலும் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தார்கள். சிறப்பு முகாம் என்ற பெயரில் எந்த வசதியும் இல்லாத ஒரு இடத்தில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகிய நால்வரும் அடைக்கப்பட்டனர்.

சாந்தன் தன்னுடைய தாயகத்திற்கு உயிருடன் திரும்ப வேண்டும் என போராடி வந்தார் . உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கூட அவர் அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது வேதனைக்குரியது. சாந்தனுடைய உடலை ஈழத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அவர்களுடைய உறவினர்கள் இங்கு வந்துள்ளார்கள்.

இந்நிலையில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதியுள்ள மூவரையும் அவரவர் விரும்புகின்ற பகுதிகளில் தங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என விசிக சார்பில் கோரிக்கை. பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழகத்தில் தங்கள் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார்கள். அது போலவே மீதமுள்ளவர்களையும் உடனடியாக தங்கள் குடும்பத்தினரோடு தங்க உத்தரவு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share this story