5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம் : பரபரப்பு தகவல்கள்

By 
tng4

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை பதவியேற்க உள்ள நிலையில் மேலும் 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற போது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது.

அமைச்சரவை எண்ணிக்கையும் 34-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது.234 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் இதற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது என்பதால் யாரையாவது நீக்கினால்தான் புதிய மந்திரியை நியமிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில்தான் ஆவடி நாசர் நீக்கப்பட்டு டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். டி.ஆர்.பி.ராஜா தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச்செயலாளராக இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்துறை இலாகா அல்லது பால்வளத்துறை இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இலாகா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பால்வளத்துறை அல்லது சுற்றுலாத்துறை இலாகா கிடைக்கும் என தெரிகிறது. சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள கா.ராமச்சந்திரன் இலாகா மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர் பெரியசாமிக்கு வருவாய்த்துறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி மாற்றப்பட்டால் அவரிடம் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வழங்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றம் செய்யப்படும் என பேசப்படுகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமரசம் ஆகிவிட்டதால் அவரது இலாகாவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.

 

Share this story